மும்பை தாக்குதல் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

உலகையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் இசைவு தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர்.

மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீஸாரால் உயிரோடு பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தீவிரவாதி தஹாவூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் கடந்த 2009-ல்பிடிபட்டார். மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து, கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழில் அதிபர் ராணா சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. அமெரிக்காவில் நடந்த குற்றம் தொடர்பான வழக்கு அவர் மீது அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த சம்மதம் தெரிவித்துள்ளது. நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியான் கூறுகையில், “62 வயதான ராணாவை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள காரணங்களில் முகாந்தரம் உள்ளதால் அவரை நாடு கடத்த சம்மதிக்கிறோம்” என்றார். மே 16ஆம் தேதி இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததாகத் தெரிகிறது.

 

 

-th