ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கு – பதிலளிக்குமாறு பிபிசிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆவணப்படம் வெளியிடப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் பிபிசி செய்தி நிறுவனம் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற 2 பகுதிகளைக் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு, இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படுவதைத் தடை செய்தது. இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த நீதிக்கான விசாரணை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கும், அதன் நீதித்துறைக்கும், பிரதமர் மோடிக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் பிபிசி ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, பிபிசி(இங்கிலாந்து) தான் இந்த ஆவணப்படுத்தைத் தயாரித்து வெளியிட்டது. பிபிசி (இந்தியா) அதன் இந்திய கிளைதான். இந்த ஆவணப்படம் இந்தியாவின் நற்பெயருக்கு மட்டுமல்லாது, அதன் நீதித்துறை உள்பட ஒட்டுமொத்த அமைப்பின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் குற்றச்சாட்டை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது. என வாதிட்டார். இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட அனைத்து வழிகள் மூலமாகவும் பிபிசி (இங்கிலாந்து), பிபிசி (இந்தியா) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

 

-th