நிர்வாக வசதிக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்

ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவிக்கை வெளியிட்டது.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ரூ.2,000 திரும்பப் பெறுதல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவிக்கை மற்றும் எஸ்பிஐயின் ஆதாரம் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு ஊழலை ஒழிக்க இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிரானவை” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கியின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராக் பி திரிபாதி வாதிடுகையில், “ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் தற்போதைய நடவடிக்கை என்பது பணமதிப்பு நீக்கம் அல்ல.

அது, ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கை. நிர்வாக செயல்பாட்டு வசதிக்காகவே ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.

 

 

-th