இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் நடைமுறைகளுடன் வர்த்தக இணைப்பிற்காக பெங்களூருவில் ஆஸ்திரேலிய தூதரகம் ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் அல்பானிஸ் இன்று பேசியுள்ளார்.
பிரதமர் மோடி ஜப்பானில் கடந்த 19-ந்தேதி தொடங்கி, மேற்கொண்ட 3 நாள் சுற்றுப்பயணத்தில் ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்று விட்டு, பின்னர் பப்புவா நியூ கினியாவுக்கு சென்றார். அதன்பின்பு, நேற்று முன்தினம் (22-ந்தேதி) ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின் இந்திய வம்சாவளியினர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான தூதரக உறவுகளால் மட்டுமே பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மதிப்பு வளர்ந்து விடவில்லை. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்தியர்களாகிய நீங்கள் அனைவருமே இதற்கான உண்மையான காரணம் என பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய தூதரகம் ஒன்று திறக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார். இந்தியாவில் திறமைக்கோ அல்லது வளங்களுக்கோ பஞ்சம் இல்லை. இந்தியா தற்போது பெரிய மற்றும் இளம் திறமையாளர்களின் தொழிற்சாலையாக திகழ்கிறது என பிரதமர் மோடி பெருமிதமுடன் பேசினார்.
இதனை தொடர்ந்து, 2-வது நாளான இன்றும் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே போக்குவரத்து, புலம்பெயர்தல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் பணி சார்ந்த விசயங்கள் உள்பட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பின்பு, இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
இதில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இன்று பேசும்போது, இந்தியாவின் பெங்களூரு நகரில் எங்களது தூதரகம் ஒன்று புதிதாக அமைக்கப்படும் என அறிவித்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் நடைமுறைகளுடன், ஆஸ்திரேலிய வர்த்தக நடவடிக்கைகளை இணைப்பதற்கு அது உதவும். இதேபோன்று, பிரிஸ்பேனில் புதிய தூதரகம் அமைப்பது என்ற இந்தியாவின் திட்டங்களையும் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் அமைய பெறும் 5-வது தூதரகம் ஆக பெங்களூரு தூதரகம் இருக்கும். எங்களுடைய நாட்டுக்கு வருகை தந்து, உற்சாக வரவேற்பை பெற்றதற்காக மீண்டும் பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வருகிற செப்டம்பரில், ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவில் வருவதற்கான ஆவலில் உள்ளேன். பிரதமர் மோடியுடன் ஓராண்டில் இது 6-வது சந்திப்பு ஆகும் என்றும் பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசும்போது குறிப்பிட்டார்.
-dt

























