நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த பெரிய கவுரவம்

1947-ல் பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல், அதே மரபுப்படி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டு, அதை அவர் நாடாளுமன்றத்தில் நிறுவுகிறார். இதில் அரசியல் செய்யத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர்கள் ஆர்.என்.ரவி (தமிழகம்), இல.கணேசன் (நாகலாந்து), தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா), மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அப்போது, சுதந்திரம் கிடைத்தபோது நடைபெற்ற முக்கியமான சம்பவம் நினைவுகூரப்படுகிறது. வெள்ளையர்களிடம் இருந்த ஆளுமை, நம் நாட்டு மக்களுக்கு கிடைத்தபோது, அந்த ஆளுமைப் பரிமாற்றத்தை எப்படி மேற்கொண்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி அது.

ஆட்சி மாற்றத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று வெள்ளையர்கள் கேட்டுள்ளனர். அப்போது பிரதமர் நேரு, இதுகுறித்து ராஜாஜியுடன் ஆலோசித்தார். பின்னர் ராஜாஜி, பல்வேறு ஆதீனங்களுடன் ஆலோசித்து, திருவாவடுதுறை ஆதீனம் மூலம் ‘தர்ம தண்டம்’ எனப்படும் செங்கோலை உருவாக்கியுள்ளனர்.

அந்த செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இருவரும் இன்றும் நலமுடன் உள்ளனர். அவர்களையும், புதிய கட்டிடத்தைக் கட்டிய தொழிலாளர்களையும் பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பாராட்டுகிறார்.

இந்த செங்கோலைக் கண்டுபிடிக்க வேண்டுமென பத்மா சுப்பிரமணியம் வலியுறுத்தினார். இதையடுத்து, செங்கோல் குறித்த உண்மைத் தகவல்களைச் சேகரிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன் பின்னர்தான், அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவன் அருங்காட்சியகத்தில் செங்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வரும் 28-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் திறப்பு விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதீன குருமார்கள் மற்றும் ஓதுவார்கள் பங்கேற்று, தேவாரம் பாடுகின்றனர். 1947-ல் கொடுக்கப்பட்ட செங்கோலை, மக்களவையில் சபாநாயகரின் அருகில் மரியாதைக்குரிய ஸ்தானத்தில் பிரதமர் வைக்கிறார். நல்லபடியாக, நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும்
என்று ஆசீர்வதித்து கொடுக்கப்பட்ட செங்கோல் அது.

இந்திய சுதந்திரத்திலும், அதிகாரப் பரிமாற்றத்திலும் தமிழகத்தின் பங்களிப்பு என்பது பெருமைக்குரியது. எனவே, இந்த விவகாரத்தில் அரசியல் செய்யத் தேவையில்லை. புதிய நாடாளுமன்றத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது நல்லதல்ல. அவர்களது நிலைப்பாட்டை மக்களுக்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆச்சரியம் அளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அவர் வேட்பாளராக இருந்தபோது, அவரைப் பற்றி எதிர்க்கட்சியினர் இழிவாகக் குற்றம் சாட்டினர். ரப்பர் ஸ்டாம்ப் என்றும், தீயசக்திகளின் பிரதிநிதி என்றும் கூறினர்.

அவர்கள்தான், தற்போது அவருக்கு மரியாதை அளிக்கின்றனர். செங்கோல் நிறுவுவது என்பது, மன்னராட்சியைக் கொண்டுவருவதாக பொருள் அல்ல. தேசத்தின் பாரம்பரியம், கலாச்சார பலம், சமநீதி, தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காகத்தான் நாடாளுமன்றத்தில் அது நிறுவப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

-th