தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றம் திறப்பு

தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு, தமிழக ஆதீனத் தலைவர்கள் வழங்கிய செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே அவர் நிறுவினார்.

டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி நேற்று காலை 7.30 மணி அளவில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தடைந்தார்.

அங்கு தேசத் தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். சாவர்க்கர் பிறந்தநாள் என்பதால், அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு பிரதமர் மோடியும், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவும் ஒன்றாக அமர்ந்திருக்க பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன.

செங்கோலை வணங்கிய மோடி

பிறகு, அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கோலுக்கு முன்பு பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கினார். அப்போது தமிழக ஆதீனத்தலைவர்கள் தமிழ் வேத மந்திரங்களை ஓதினர். திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம் உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்பட்டன. பிரதமர் மீது மலர் தூவி வாழ்த்தினர். பிறகு செங்கோலை பிரதமரிடம் ஆதீனத் தலைவர்கள் வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட பிரதமர், புதிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு சென்று, மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே அதை நிறுவினார். புதிய நாடாளுமன்ற பெயர் பலகையையும் திறந்துவைத்தார். நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்னர் நடந்த சர்வமத பிரார்த்தனையில் பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

திறப்பு விழா முடிந்த பிறகு மதியம் 12 மணி அளவில் மக்களவைக்கு பிரதமர் சென்றார்.

அப்போது அவையில் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் தேவகவுடா, பல்வேறு மாநில முதல்வர்கள், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செங்கோல், புதிய நாடாளுமன்றம் குறித்த 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல. 140 கோடி இந்தியர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகி உள்ளது. இந்திய ஜனநாயகத்துக்கு பழமையும், புதுமையும் இணைந்த புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. புதிய இந்தியா, புதிய இலக்குகளை நிர்ணயித்து, புதிய பாதையில் பயணிக்கிறது. உற்சாகம், பலம், சிந்தனை, நம்பிக்கை என அனைத்திலும் புதுமை பெற்று, நமது நாடு முழுமையாக மாறியிருக்கிறது. இன்றைய உலகம் இந்தியாவை மிகுந்த நம்பிக்கை, எதிர்பார்ப்போடு பார்க்கிறது. இந்தியா முன்னேறும்போது, ஒட்டுமொத்த உலகமும் முன்னேறும்.

சோழர்களின் செங்கோல்

தமிழகத்தில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் செங்கோல் என்பது நேர்மை, நீதி, சேவையின் அடையாளமாக இருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்தபோது மூதறிஞர் ராஜாஜி அறிவுரைப்படி, திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் உருவாக்கப்பட்ட செங்கோல் இப்போது நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. அவையை சிறப்பாக வழிநடத்த இந்த செங்கோல் உந்து சக்தியாக இருக்கும்.

ஜனநாயகம், குடியரசு குறித்த விளக்கத்தை மகாபாரதத்திலேயே பார்க்கலாம். மக்களில் இருந்து ஒருவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நடைமுறையை கி.பி.900-ம் ஆண்டின் தமிழக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

சுயாட்சி, சுதந்திரம் என்ற வேட்கையுடன் நாட்டு மக்களை தேசத் தந்தை மகாத்மா காந்தி ஒன்றிணைத்தார். இப்போதைய சுதந்திர தின அமிர்த பெருவிழா காலத்தில் காந்தியடிகளின் சுயசார்பு இந்தியா திட்டம் அதிதீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. தேசத்துக்கு முதலிடம் என்ற கொள்கையுடன் புதிய இந்தியா உருவாகியுள்ளது. நாடு முழுவதும் வறுமை ஒழிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக நமது நாடு அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.

நாட்டின் நலன் கருதி, புதிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்படும். புதுமை, செழுமை, வலிமையின் அடையாளமாக புதிய நாடாளுமன்றம் விளங்கும். நீதி, உண்மை, கண்ணியம், கடமைபாதையில் இந்தியா வீறுநடைபோடும். 25 ஆண்டுகளில் வளர்ந்தநாடாக இந்தியா உருவெடுக்கும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

20 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளின் பிரதிநிதிகள் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதை முன்னிறுத்தி காங்கிரஸ், திமுக, சிவசேனா உத்தவ் அணி, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்தன.

 

-th