மழையால் ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிமழைகாரணமாக ரத்து செய்யப்பட்டது.அதேவேளையில் இந்த ஆட்டம் மாற்று நாளான இன்று (29-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இறுதிப் போட்டிஅகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறுவதாக இருந்தது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத ஆயத்தமாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மைதான பகுதியைசுற்றிலும் மழை பொழிந்தது. இதனால் மைதானத்தின் ஆடுகளம் தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டது.

திடீரென பெய்த மழையால் திட்டமிட்டபடி போட்டியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல இடி, மின்னலுடன் கனமழையாக மாறியதால் கலை நிகழ்சிகள் மற்றும் டாஸ் நிகழ்வும் நடைபெறவில்லை. இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையும் நிலை உருவானது.

சுமார் 9 மணி அளவில் மழைப்பொழிவு நின்றது. இதையடுத்து மைதான பணியாளர்கள் ஆடுகளத்தை தயார் செய்யும் பணியை தீவிரப்படுத்தினர். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆடுகளத்தில் அதிக அளவில் தண்ணீர்தேங்கியது. எனவே போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சுமார் 10.55 மணி அளவில் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத், களநடுவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நடுவர்கள் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோரிடம் பேசினர். இதன் முடிவில் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மாற்று நாளான இன்று (29-ம் தேதி) இறுதிப் போட்டி நடைபெறும் எனவும் வழக்கம் போன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

 

-th