ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.
207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் தகவல் கூறியுள்ளார்.
இதனிடையே, ஹவுராவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் விபத்து எதிரொலியாக மேலும் 5 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம் என்று கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நிவாரணத் தொகை: ஒடிசாவில் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
மேலும், “சம்பவ இடத்திற்கு விரைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். புவனேஸ்வர், கொல்கத்தாவில் இருந்து மீட்புக் குழுக்கள் வந்துள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.
-th