கனடாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை சித்தரிக்கும் வகையில் நடந்த ஊர்வலக் காட்சி வெட்கக்கேடானது என்று காங்கிரஸின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து, கனடா தூதரக அதிகாரிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கண்டனத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீடியோ காட்சி: சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ காட்சி ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை சித்தரிக்கப்பட்ட ஊர்வலக் காட்சி இடம் பெற்றுள்ளது. தகவல்களின்படி, ஜூன் 6-ம் தேதி ‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ நிகழ்வின் 39-ம் ஆண்டு நினைவு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூன் 4-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்களால் கனடாவில் உள்ள ப்ராம்டன் நகரில் அந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. அதில் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்படும் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், “ஸ்ரீ தர்பார் சாஹிப் தாக்குதலுக்கான பழிவாங்கல்” என்ற வாசகமும் இடம் அதில் பெற்றிருந்தது.
கண்டிக்கத்தக்கது: இந்த வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் பிரமுகர் மலிந்த தியோரா, “இந்திரா காந்தியின் படுகொலையை சித்தரித்து கனடாவின் ப்ராம்டன் நகரில் 5 கி.மீ. தூரத்துக்கு நடந்த இந்த ஊர்வலத்தைக் கண்டு ஓர் இந்தியனாக நான் திகைப்படைந்தேன். இது ஒரு தரப்பினைப் பற்றி மட்டும் பேசுவது இல்லை. இது ஒரு நாட்டின் வரலாற்றின் மதிப்பு சம்பந்தப்பட்டது. அதன் பிரதமரின் படுகொலை உண்டாக்கிய வலியைப் பற்றியது. இந்த அத்துமீறல் நிச்சயம் உலகின் கண்டனத்திற்கு உரியது” என்று தெரிவித்துள்ளார்.
வெட்கக்கேடானது: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தியோராவின் இந்த ட்வீட்டை மறுபகிர்வு செய்துள்ளார். அதில், “நான் முழுவதுமாக இதனை ஏற்றுக்கொள்கிறேன். இது மிகவும் வெட்கக்கேடானது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக கனடா அதிகாரிகளிடம் இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக கனடாவின் சர்வதேச விவகாரத் துறைக்கு, ஒட்டோவாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக புதன்கிழமை குறிப்புரை அனுப்பப்பட்டு, சர்ச்சைக்குரிய உருவ பொம்மைகள் இடம்பெற்றது குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இதுகுறித்து புதுடெல்லியில் உள்ள இந்தியாவிற்கான கனடா தூதர் கேம்ரான் மேக்கி தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கனடாவில் நடந்த ஒரு நிகழ்வில், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாடப்பட்டதாக வந்த தகவல் அறிந்து திகைப்படைந்தேன். கனடா இது போன்ற வெறுப்புகளுக்கோ, வன்முறையைப் புனிதப்படுத்துவதற்கான இடமோ இல்லை. இந்த நடவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
-th