இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு

நீரிழிவு நோயாளிகள் குறித்த ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இணைந்து நடத்தின.

நாடு முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் உலகப் புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். 13 கோடியே 60 லட்சம் பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இது நாட்டின் மக்கள்தொகையில் 11.4 சதவீதம் பேருக்கு வளர்ச்சிதை மாற்றம் பிரச்சினை உள்ளதை காட்டுகிறது.

கோவா மாநிலத்தில் மிக அதிகமாக 26.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. ஆனால் மக்கள்தொகை அதிகம் உள்ள உத்தரபிரதேசத்தில் 4.8 சதவீதம் பேருக்கு மட்டுமே நீரிழிவு பிரச்சினை உள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் அதிகளவில் உள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 31.5 கோடி பேருக்கு அதிகரத்தழுத்த பிரச்சினை உள்ளன.

25.4 கோடி பேருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளது. 35.1 கோடி பேருக்கு தொந்தி பிரச்சினை உள்ளது. 21.3 கோடி பேருக்கு கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. தொற்றாத நோய்களின் வளர்சிதை மாற்றத்தால், இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு நீண்ட கால இதயப் பிரச்சினை மற்றும் உடல் உறுப்பு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-th