பெண்கள் இலவச பயண திட்டத்தால் ஒரே நாளில் ரூ.8.84 கோடி செலவு

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்த வகையில் ஒரே நாளில் ரூ.8.84 கோடி செலவாகி உள்ளது. இந்த திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.3,400 கோடி அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என கூறப்படுகிறது.

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் கர்நாடகத்தில் முதல்-மந்திாி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு முன்பு அளித்த 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. அதில் ஒன்றான பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணத்தை அனுமதிக்கும் ‘சக்தி’ திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா கடந்த 11-ந் தேதி தொடங்கி வைத்தார்.

அதன்படி அரசின் சொகுசு பஸ்களை தவிர பிற பஸ்களில் கர்நாடகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சராசரியாக தினமும் அரசு பஸ்களில் 41½ லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ரூ.8.84 கோடி செலவு இந்த நிலையில் கர்நாடகத்தில் முதல் நாளான கடந்த 11-ந்தேதி அரசு பஸ்களில் பெண்களின் இலவச பயணத்திற்கு ரூ.1.40 கோடி செலவாகியுள்ளது. அன்று மதியம் 1 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 4 லட்சத்து 75 ஆயிரம் பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

2-வது நாளான நேற்று முன்தினம் ரூ.8.84 கோடி செலவாகி இருக்கிறது. ஆகமொத்தம் 2 நாட்களில் மட்டும் பெண்களின் இலவச பயணத்திற்காக ரூ.10.24 கோடி செலவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தொகையை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு மூலம் வழங்க உள்ளது. ரூ.3,400 கோடி நிதிச்சுமை இதில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) ரூ.3.58 கோடியும், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு(பி.எம்.டி.சி.) ரூ.1¾ கோடியும், வடமேற்கு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.2.11 கோடியும், கல்யாண-கர்நாடக போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1.40 கோடியும் செலவாகியுள்ளது.

நேற்று முன்தினம் அரசு பஸ்களில் பயணித்த பெண்களின் எண்ணிக்கைப்படி கணக்கிட்டு பார்த்தால், கர்நாடக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,200 கோடி முதல் ரூ.3,400 கோடி வரை நிதிச்சுமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

-dt