வடமாநிலங்களான உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இன்னும் பல மாநிலங்களிலும் வெயில் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறது. தினமும் சராசரியாக 108 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி வருகிறது.
இந்த வெயிலால் வெப்ப அலைகளும் தாக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். பல்வேறு வெப்ப நோய்களின் தாக்குதலுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். இது குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நாடெங்கும் இந்த வெப்ப அலைகளை சந்திப்பதற்கான தயார் நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கிறபோது விரைவான நடவடிக்கை எடுக்கவும் என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்வது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
வெப்ப அலைகளினால் மக்களின் ஆரோக்கியம் லேசான அளவில் மட்டுமே பாதிக்கக்கூடிய அளவில் பார்த்துக்கொள்ள ஆராய்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. வெப்ப அலைகளை எதிர்கொள்வதில் குறைந்த, நடுத்தர நீண்டகால செயல் திட்டங்கள் என்ன என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-mm