சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் – பிரதமர்

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில் பிரதமர் மோடி நேற்று அமெரிக்காவுக்கு சென்றார். இதையொட்டி அமெரிக்க நாளிதழ் ‘‘தி வால் ஸ்டிரீட் ஜர்னலுக்கு’’ அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு முன்எப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்து வருகிறது.

பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இரு நாடுகளின்தலைவர்கள் இடையே அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

சீனாவுடன் நல்லுறவு நிலைத்திருக்க எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும். கருத்து வேறுபாடுகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே விரும்புகிறோம். அதேநேரம் இந்தியாவின் இறையாண்மை, கண்ணியத்தை காப்பாற்ற எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்.

இந்திய, ரஷ்ய உறவு குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அனைவரும் அறிந்தது. எங்களது நிலைப்பாட்டை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதாக சிலர் கூறுகின்றனர். நாங்கள் நடுநிலை வகிக்கவில்லை, அமைதியின் பக்கம் நிற்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் பிறந்தமுதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றிருக்கிறேன். அதனால் எனது சிந்தனை, செயல்பாடுகள், பேச்சுகளில் எனது தாய்நாட்டின் பண்புகள், மாண்புகள், மரபுகள் வலுவாக எதிரொலிக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து விமானத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். நள்ளிரவில் அவர் செயின்ட் அண்ட்ரூ விமானப் படைத் தளத்தில் தரையிறங்கினார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 9.30 மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது.

இதன்படி அமெரிக்காவில் மதிய நேரத்தில் பிரதமர் மோடி தரையிறங்கினார். அமெரிக்காவுக்கு செல்லும் உலக தலைவர்களை அந்த நாட்டின் சிறப்பு வரவேற்பு அதிகாரி ரூபஸ் கிபோர்ட் வரவேற்பது வழக்கம். இதன்படி அவரது தலைமையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரும் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

 

-th