இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு சேருவது உலகத்தின் வளர்ச்சிக்கு உதவும்

இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு சேருவது உலகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஏற்பாட்டில் என்.எஸ்.எப். என்னும் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கல்வித்துறையிலும், ஆராய்ச்சித்துறையிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்புக்கு 5 அம்ச திட்டங்களை அறிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது:- இந்தியா, பல்வேறு திட்டங்களில் தேசிய அறிவியல் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்ததற்காக ஜில் பைடனுக்கு நன்றி.

வளர்ச்சியின் வேகத்தைத் தக்க வைப்பதற்கு, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள திறமைகளின் ஒத்துழைப்பை உறுதி செய்வது முக்கியம் ஆகும். இந்த பத்தாண்டுகளை தொழில்நுட்ப பத்தாண்டுகளாக உருவாக்குவதே எனது இலக்கு ஆகும்.

இந்தியா இளைஞர்களின் பட்டாளத்தைக் கொண்டுள்ளது, இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு சேருவது உலகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் டுவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்கை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக வாஷிங்டன் நகரில் நேற்று அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அது பற்றிய விவரம் வருமாறு:- அமெரிக்காவின் பிரபல ‘சிப்’ தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜியின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் மெஹரோத்ராவை சந்தித்துப்பேசினார்.

இந்த சந்திப்பின்போது அவர், இந்தியாவில் ‘செமிகண்டக்டர்’ தயாரிப்பை ஊக்குவிக்குமாறு மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இணைந்து செயல்பட விருப்பம் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கேரி இ.டிக்கர்சனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் கேரி இ.டிக்கர்சன் கூறும்போது, ” இந்தியா நல்லதோர் வளர்ச்சி அடைவதற்கான தருணம் இது.

நாம் அபார வெற்றி பெறுவதற்கு பிரதமர் மோடியுடனும், இந்தியர்கள் ஒவ்வொருவருடனும் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் மிகவும் எதிர்நோக்கி உள்ளோம்” என தெரிவித்தார். விமானம், எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பு ஜெனரல் எலெக்டிரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரன்ஸ் கல்பையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அந்த நிறுவனம் இந்தியாவில் விமானப்போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்வதற்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் இந்த நிறுவனம், உற்பத்தி செய்வதற்கான நீண்ட கால அர்ப்பணிப்புக்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர்கள் இந்தியாவில் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு ஜெனரல் எலெக்டிரிக் நிறுவனத்தின் சிறந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர் என தகவல்கள் கூறுகின்றன.

 

-dt