மணிப்பூரில் அமைதி திரும்ப உதவுங்கள், பொதுமக்களுக்கு ராணுவ அதிகாரிகள் வேண்டுகோள்

மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு மாநில மக்கள் ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயிபிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 3-ம் தேதி ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணி’யை மைதேயி பிரிவினருக்கு எதிராககுகி இனமக்கள் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. அன்றுமுதல் அங்கு தொடர்ந்து வன்முறைச்சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறைக்கு இதுவரைசுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மைதேயி இனத்தவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் கிராம மக்களுடன் கலந்து இருப்பதால் அவர்களை கைது செய்வதில் போலீஸார், அதிரடிப்படை, பாதுகாப்புப் படையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வன்முறை நடைபெற்ற இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மணிப்பூரில் முகாமிட்டிருக்கும் ராணுவ மூத்த அதிகாரிகள் நேற்று கூறியதாவது: மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு உதவ வேண்டும் எனில்எங்களுக்கு அப்பகுதி மக்கள் உதவவேண்டும். மாநில மக்கள்ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதுநடவடிக்கை எடுக்க நாங்கள் சென்றால், அங்குள்ள பெண் செயற்பாட்டாளர்கள் சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்துகின்றனர். ராணுவம் நடத்தும் ஆபரேஷன்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.

அண்மையில் இத்தாம் கிராமத்தில் கிராம மக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பெண் செயற்பாட்டாளர் தலைமையிலான கிராம மக்கள் வேண்டுமென்றே சாலையை மறித்தனர். இதனால் 12 தீவிரவாதிகள் விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மணிப்பூரில் செயலாற்றி வரும் பெண் செயற்பாட்டாளர்கள், வேண்டுமென்றே சாலையை மறித்து போராட்டம் நடத்துகின்றனர். பாதுகாப்புப் படையினரின் ஆபரேஷன்களை தடை செய்கின்றனர்.

இத்தகைய தேவையற்ற குறுக்கீடுகளால் முக்கியமான நேரங்களில் பொதுமக்களின் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுவது பிரச்சினைக்குரியதாக மாறுகிறது.

எனவே, மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்றால், மணிப்பூருக்கு உதவ வேண்டும் என்றால் மாநில மக்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

-th