ஆளுநர் ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும்

ஆளுநர் ரவியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசியல் சட்டத்தின்கீழ் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் இல்லையென்று தெரிந்திருந்தும், ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அதைக் கிடப்பில் போடுவதாக உங்களுக்குக் கடிதம் அனுப்பினார். அவருடைய நோக்கம் என்ன என்று கருதுகிறீர்கள்?

எனது தலைமையிலான தி.மு.க. அரசு, நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் தடுப்பதே ஆளுநரின் உள்நோக்கம். இரண்டு ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்து – இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காண்பித்துள்ளோம். இதை எல்லாம் ஆளுநரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் ஆளுநருக்கு துளியும் கிடையாது. அதனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக, தமிழ்நாடு அரசுக்கு எதிராக “விதண்டாவாதம்” பேசி வருகிறார். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்..

புதிய ஒப்பந்தங்களைப் போடுவதற்காகவும், உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு நான் சென்றேன். அந்த நேரம் பார்த்து, ‘நேரில் அழைப்பு விடுப்பதால் முதலீடுகள் வராது’ என்று இவர் பேசுகிறார். இதன் மூலமாக அவர் என்ன சொல்ல விரும்புகிறார்? முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களிடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் கிடைத்துவிடக் கூடாது என நினைக்கிறார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி விடக் கூடாது என நினைக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அவரது இந்த பேச்சுகள்.

நாள்தோறும் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசுவது, நல்லாட்சி இங்கு நடப்பதைப் பார்த்து அவர் எரிச்சல் அடைவதைக் காட்டுகிறது. அவரது ஆதாரமற்ற – அரசியல் சட்டத்தை மீறிய பேச்சுகள், நடவடிக்கைகள் சமூக சலசலப்பை ஏற்படுத்துவதாக – சமூக நல்லிணக்கத்தை சிதைப்பதாக அமைந்துள்ளன. தனக்கு எந்த அதிகாரமும் கிடையாது, அரசியல்சட்டப்படி தான் ஒரு நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தே, அவர் தமிழ்நாட்டு மக்களுடன் – தமிழ்நாட்டின் நலனுடன் தனது விபரீத விளையாட்டைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்.

ஒன்றிய அமைச்சகம் சொல்லிச் செய்கிறாரா, இல்லையா என்பதற்குள் நான் போகவிரும்பவில்லை. அவராகச் செய்தாலும், ஒன்றிய அரசு சொல்லிச் செய்தாலும், ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் – நீக்கும் அதிகாரம் இல்லை என்பதே அரசியல் சட்டம். அவரை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த போது அதை அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சித்தீர்கள். ஆனால் நீங்களே ஒருகாலத்தில் வழக்குகளில் சிக்கிய அ.தி.மு.க. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இது ஒரு முரண்பாடான நிலைபாடு என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?

இத்தகைய கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வைப்பது என்பது அரசியல் நடவடிக்கை. ஆனால் ஆளுநர் அரசியல்வாதியாக மாறக் கூடாது. அவர் அரசியல் சட்டபடிதானே நடக்க வேண்டும். அப்படி அவர் நடக்காததுதான் எங்களது சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கிறது. செந்தில் பாலாஜியை பாஜக குறிவைப்பதைப் போலவே ஆளுநரும் செயல்படுகிறார். அதனைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

செந்தில் பாலாஜியின் கைதே சட்டவிரோதமானது என்று அவரது மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். அமலாக்கத்துறையை அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக பயன்படுத்துகிறது என்பது எங்களது பகிரங்க குற்றச்சாட்டு. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உள்ளான அதிமுக அமைச்சர்களை அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் கைது செய்யவில்லை; ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கியெறிந்த பிறகும் கைது செய்யவில்லை.

ஆனால் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செந்தில் பாலாஜியை வருமானவரித் துறை ரெய்டு செய்கிறது, அமலாக்கத்துறை மனிதநேயமின்றி கைது செய்கிறது. நேர்மையாக செயல்பட வேண்டிய அந்த அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

9 ஆண்டுக்கு முந்தைய ஒரு புகாருக்காக – திடீரென்று ரெய்டு நடத்தி – 18 மணி நேரம் அடைத்து வைத்து – சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர் அமைச்சராக இருப்பவர். பகிரங்கமாக வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தவர் தானே. அப்படி இருக்கும் போது அடைத்து வைத்து ஒரே நாளில் வாக்குமூலம் வாங்க வேண்டிய அவரசம் எங்கே வந்தது?

இதயத்தில் நான்கு அடைப்பு இருக்கிறது, அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அது “நாடகம்” என இதயத்தில் ஈரமில்லாமல் வாதிடுகிறது அமலாக்கத்துறை. முதலில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துமனை மருத்துவர்கள் கூறியதை நம்ப மறுத்தது. பிறகு தனியார் மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, அமலாக்கத்துறையின் இந்த மனித நேயமற்ற செயலையும், “செலக்ட்டிவ்” கைதையும்தான் அதிகார துஷ்பிரயோகம் என்கிறோம். எதிர்க்கிறோம்.

எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களது நிலைப்பாடு. மருத்துவமனையில் இருப்பதால் துறை இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். அவ்வளவுதான்! மற்றபடி நேர்மையான- சட்டத்திற்குட்பட்ட விசாரணையை நாங்கள் எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. சட்டப்படியே சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம்.

 

 

-th