தேசிய அளவில் ஜிஎஸ்டி வசூலில் தமிழகம், புதுச்சேரி மண்டலம் 3-ம் இடம்

ஜிஎஸ்டி வருவாய் வசூலில் கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் தமிழகம், புதுச்சேரி மண்டலம் தேசிய அளவில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் கே.பாலகிஷன் ராஜு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுகம் செய்ததன் 6-ம் ஆண்டு தற்போது கொண்டாடப்படுகிறது. இது நம்நாட்டில் செய்யப்பட்ட மிகப்பெரியவரி சீர்திருத்தம் ஆகும். இதன்மூலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறப்பான மற்றும் எளிமையான வரி என்ற குறிக்கோள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி ஜிஎஸ்டி மண்டலத்தில் ஜிஎஸ்டி செலுத்துவோர் 4.57 லட்சம் பேர் உள்ளனர். இந்த மண்டலம் கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் அகில இந்திய ஜிஎஸ்டி வருவாயில் 8.12 சதவீதமும், அகில இந்திய கலால் வருவாயில் 4.72 சதவீதமும் பங்களிப்பை வழங்கி உள்ளது.

நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் முந்தைய ஆண்டைவிட 2022-23-ம் ஆண்டில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மண்டலத்தில் இந்த வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம், கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம், புதுச்சேரி மண்டலம் தேசிய அளவில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையாக 2022-23-ம் ஆண்டில் ரூ.5,771 கோடி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27 சதவீதம் அதிகம்.

3 ஆயிரம் போலி பதிவுகள்: தமிழகம், புதுச்சேரி மண்டலத்தில் உள்ள 3 தணிக்கை ஆணையரகம் மூலம் 2022-23-ம் ஆண்டில் ரூ.288 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.

போலி ஜிஎஸ்டி பதிவுகளை கண்டுபிடிக்க, கடந்த மே மாதம் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், 3 ஆயிரம் போலி ஜிஎஸ்டி பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

-th