இந்தியா கேட்டுக் கொண்டால் மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்த உதவத் தயார் – அமெரிக்க தூதர்

இந்தியா கேட்டுக்கொண்டால் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி முன்வைத்தக் கருத்து பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

என்ன பேசினார் எரிக்? கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் எரிக் கார்செட்டி. அப்போது அவர், “நான் முதலில் மணிப்பூர் பற்றி பேச விரும்புகிறேன். மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். நீங்கள் இதில் அமெரிக்காவுக்கு என்ன அக்கறை என்று வினவினாள், அதில் எந்த உத்தி சார்ந்த அக்கறையும் இல்லை. மனிதம் சார்ந்த அக்கறை என்று கூறுவேன்.

மணிப்பூர் கலவரத்தில் குழந்தைகளும், தனிநபர்களும் உயிரிழப்பதைப் பார்த்து அக்கறை கொள்ள இந்தியராகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அங்கே அமைதிதான் தேவை. அதுவே அனைத்து நன்மைகளுக்குமான முன்னோடி. வடகிழக்கு மாநிலங்களில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அமைதி இல்லாவிட்டால் அது எதுவும் இயல்பாக இருக்க இயலாது.

நாங்கள் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உதவத் தயாராக இருக்கிறோம். எங்களிடம் உதவி கேட்கும்பட்சத்தில் அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இது முழுக்கமுழுக்க உள்நாட்டு விவகாரம் என்பதையும் அறிந்திருக்கிறோம்.

அங்கே விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். அங்கே அமைதி திரும்பினால் இன்னும் அதிகமான திட்டங்களை அங்கே செயல்படுத்தலாம். அதிகமான முதலீடுகளைச் செய்யலாம். நான் ஒரே ஒரு விஷயத்தைத் தெளிவாக நிறுவ விரும்புகிறேன். இந்தியாவின் கிழக்கும், வடகிழக்கும் அமெரிக்காவின் அக்கறைக்கு உரிய பகுதிகள். அதன் மக்களும், இடங்களும், வளங்களும், எதிர்காலமும் நாங்கள் அக்கறையோடு அணுகும் விஷயங்கள்” என்றார்.

இது அரிதினும் அரிது! உள்நாட்டு விவகாரத்தில் உதவத் தயார் என்று அமெரிக்க தூதர் கூறியிருப்பது விவாதப் பொருள் ஆகியுள்ள நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது 40 ஆண்டுகால பொது வாழ்வில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து இதுவரை எந்த ஒரு அமெரிக்க தூதரும் இப்படியான கருத்தைத் தெரிவித்ததில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

என்ன நடக்கிறது மணிப்பூரில்? மணிப்பூரின் மேதேயி மக்கள், பெரும்பான்மை இனத்தவர். இவர்கள் மாநிலத்தின் சமவெளிப் பகுதிகளில் வசிக்கிறார்கள். ஆட்சியிலும் அதிகாரத்திலும் இவர்களின் கொடியே அங்கு பறக்கிறது. மணிப்பூரின் புவியமைப்பை பொறுத்தளவில், சமவெளியின் பங்கு குறைவாகவும், மலைப்பாங்கு அதிகமாகவும் கொண்டுள்ளது. மலைப்பாங்கு நெடுக, குகி மற்றும் நாகர் பழங்குடி மக்களே வசிக்கின்றனர். 32 உட்பிரிவுகளைக் கொண்ட குகி மக்கள், மேதேயி மக்கள் அளவுக்கு முன்னேற வாய்ப்பின்றி பின்தங்கியே உள்ளனர்.

இந்நிலையில் மேதேயி மக்களின் பட்டியலின உரிமை குரலுக்கு, குகி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே சகலத்தையும் ஆக்கிரமித்து முன்னேறி இருக்கும் மேதேயி மக்கள், பழங்குடி பட்டியலுக்குள் வந்தால் தாங்கள் மேலும் நலிவடைந்துவிடுவோம் என அச்சம் தெரிவிக்கின்றனர் குகி மக்கள்.

இதுதான் இரு தரப்பினருக்கும் இடையேயான போராட்டத்துக்குக் காரணம். இதனால் கடந்த 2 மாதங்களாக அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வன்முறைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

-th