இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்

இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி வளாகம் வரவுள்ளது. இங்குவரும் அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக தான்சானியா சென்றுள்ளார். அங்குள்ள ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி புதிய வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில் சென்னை ஐஐடி, இந்திய கல்வி அமைச்சகம், ஜன்ஜிபார் கல்வி அமைச்சகம் ஆகியவை கையெழுத்திட்டன.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தான்சானியாவின் ஜன்ஜிபார் மாகாணத்தில் உள்ள ஐஐடி வளாகம் உலகத்தரத்திலான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும். உலகளாவிய தேவையை கருத்தில்கொண்டு திறனை வளர்க்கும் நோக்கத்துடன் தான்சானியாவில் ஐஐடி வளாகம் அமைக்கப்படுகிறது. இந்திய உயர் கல்வி மற்றும் புத்தாக்கத்தில் உலகத்துக்கு முன்மாதிரியாக இது செயல்படும்.

இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்படும் முதல் ஐஐடி வளாகமாக இது இருக்கும். இந்தியா – தான்சானியா இடையேயான நீண்டகால நட்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஐஐடி வளாகம் அமையவுள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மக்கள் இடையேயான உறவில் இந்தியா கவனம் செலுத்துவதை நினைவுபடுத்துவதாக இருக்கும்.

சிறப்பாக செயல்படும் இந்திய பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் கிளைகள் அமைக்க, தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தான்சானியா மற்றும் இந்தியா இடையேயான உறவை அங்கீகரிக்கும் வகையில், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் அக்டோபர் முதல் பட்டப் படிப்புகளை தொடங்கதிட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தனிச்சிறப்பான நட்புறவு, சென்னை ஐஐடியை ஆப்பிரிக்காவில் மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். ஆப்பிரிக்காவின் உயர்கல்வி தேவையையும் நிறைவேற்றும். இங்குள்ள பட்டப்படிப்புகள், பாடத்திட்டங்கள், மாணவர்கள் தேர்வு முறை உட்பட இதர விஷயங்களை சென்னை ஐஐடி முடிவு செய்யும். செலவினங்களை தான்சானியாவின் ஜன்ஜிபார் அரசு ஏற்கும்.

இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 

 

-th