பாகிஸ்தான் பெண் உளவாளிகளுக்கு ஏவுகணை ரகசியங்களை வழங்கிய டிஆர்டிஓ விஞ்ஞானி

பாகிஸ்தான் பெண் உளவாளிகளுக்கு இந்திய ஏவுகணை ரகசியங்களை அவர் வழங்கியதாக போலீஸார் குற்றம்சாட்டினர்.

மகாராஷ்டிராவின் புனேவில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் (டிஆர்டிஓ) செயல்படுகிறது. அந்த மையத்தின் இயக்குநராக பிரதீப் குருல்கர் பணியாற்றி வந்தார். அக்னி ஏவுகணை, சக்தி ஏவுகணை, நிர்பய் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணை திட்டங்களில் அவர் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி உள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலைமையில் பல்வேறு ஏவுகணை திட்டங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு சமூக வலைதளத்தில் தாரா தாஸ் குப்தா என்ற பெண்ணுடன் பிரதீப் குருல்கருக்கு தொடர்பு ஏற்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிப்பதாக கூறிய அந்த பெண்ணுடன் அவர் நெருங்கி பழகினார். அப்போது சமூக வலைதளங்கள் வாயிலாக தனது ஆபாச படங்கள், வீடியோக்களை லண்டன் பெண், குருல்கருக்கு அனுப்பினார்.

இருவரின் சமூக வலைதள உரையாடல்களின்போது இந்தியாவின் ஏவுகணை திட்டங்கள், ரஃபேல் போர் விமானங்கள் குறித்த ரகசியங்களை பிரதீப் குருல்கரிடம் இருந்து அந்த பெண் பெற்றிருக்கிறார். இதன் பிறகு ஜூஹி அரோரா என்ற பெயருடைய லண்டன் பெண்ணுடனும் குருல்கருக்கு சமூக வலைதளம் வாயிலாக தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணிடமும் இந்திய ஏவுகணை திட்டங்கள் தொடர்பான ரகசியங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த மே 3-ம் தேதி மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், பிரதீப் குருல்கரை கைது செய்தனர். அப்போதுதான் சமூகவலைதளங்களில் தன்னோடு உறவாடியாது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பெண் உளவாளிகள் என்பது குருல்கருக்கு தெரியவந்தது. தற்போது அவர் புனேவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். புனேவின் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸார் அண்மையில் 1,837 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் பெண் உளவாளிகளிடம் இந்திய ஏவுகணை ரகசியங்களை பிரதீப் குருல்கர் வழங்கியுள்ளார். தனது இ-மெயில் பாஸ்வேர்டையும் அந்த பெண்களுக்கு குருல்கர் அளித்திருக்கிறார். உளவாளி பெண்கள் கூறியதன் பேரில் சில செயலிகளையும் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார்.

அக்னி 6 ஏவுகணை திட்டம், இந்தியாவின் ட்ரோன் திட்டங்கள், இந்திய ராணுவத்தின் ரோபோ திட்டம் குறித்த முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் அவர் அளித்திருக்கிறார். குருல்கரின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் மூலம் அவரது பேச்சு, உரையாடல்கள், தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு கண்காணித்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எப் ஊழியர் கைது: குஜராத்தின் கட்ச் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் நிலேஷ் என்பவர் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக அதிதி என்ற பெண் அவருக்கு அறிமுகமானார்.

அந்த பெண் மீது காதல் வயப்பட்ட நிலேஷ், எல்லை பாதுகாப்புப் படை குறித்த பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதற்கு பிரதிபலனாக அந்த பெண் தனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். அதோடு நிலேஷ் அனுப்பும் ஒவ்வொரு தகவல், புகைப்படம், வீடியோக்களுக்கு பணத்தையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்து, பிஎஸ்எப் ஊழியர் நிலேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

 

 

 

-th