ஊழல் முறைகேட்டில் தெலங்கானா மாநிலம் முதலிடம்

தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து விட்டன. ஊழலில் தெலங்கானாதான் நாட்டிலேயே முதல் இடம் வகிக்கிறது. இவர்களது ஊழல் டெல்லி வரைபரவி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தெலங்கானா மாநிலம், வாரங்கலில் ரூ. 6,112 கோடி மதிப்பிலான அரசு நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர், வாரங்கலில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தார்.

பின்னர் வாரங்கல் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ரூ. 521 கோடி செலவில் அமைய உள்ள ரயில் கட்டுமான பணிகளுக்கான திட்டம், ரூ. 2,147 கோடி செலவில் ஜகித்யாலா – கரீம்நகர் – வாரங்கல் தேசிய நெடுஞ்சாலை திட்டம், ரூ. 3441 கோடி செலவில் வாரங்கல் – மஞ்சிராலா தேசிய நெடுஞ்சாலை திட்டம் என மொத்தம் 6,112 கோடி மதிப்பிலான அரசு நல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பிரதமர்மோடி தெலுங்கில் தனது உரையைதொடங்கினார். அவர் பேசியதாவது:

தெலங்கானா மாநிலம் உதயமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தெலங்கானா மாநிலத்தின் பங்கும் உள்ளது. தற்போது ரூ.6 ஆயிரம் கோடிசெலவில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதிக்கு 4 வழி சாலைகள், 6 வழிச்சாலைகள் வரப்போகின்றன.

ரயில்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இங்கு அமைய உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை செய்து வருகிறது. சில மாநிலங்களும் அண்டை மாநில உதவியோடு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது சகஜம். ஆனால், முதன் முறையாக இரு மாநிலங்களும் இணைந்து ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற ஊழல் மிக்க மாநிலத்தை பார்க்கவா அன்று பல இளைஞர்கள் உயிர் தியாகம் செய்தனர்?

மாணவர்களுக்கு துரோகம்: மத்திய அரசை விமர்சிப்பதே கேசிஆருக்கு (கே. சந்திரசேகர ராவ்) வேலையாகி விட்டது. இதுபோன்ற ஒரு குடும்ப அரசியலில் மாநிலம் சிக்கும் என்பதை மக்கள் ஊகிக்க வில்லை போலும். காங்கிரஸின் முறைகேடுகளை மக்கள் பார்த்து சலித்து விட்டனர். தற்போது கே.சி.ஆரின் முறைகேடுகளை மக்கள் கவனித்து வருகின்றனர். இந்த இரு கட்சிகளையும் நாம் காணாமல் செய்து விடுவோம்.

கேசிஆரின் அரசு இளைஞர்களை ஏமாற்றி விட்டது. பல லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு மவுனமாகி விட்டது. இது இளைஞர்களை ஏமாற்றுவதுஆகாதா? இதற்கு தெலங்கானாமாநில பொதுத் தேர்வாணையம் (டிஎஸ்பிசி) முறைகேடு வழக்கே ஒரு சாட்சியாகும்.

தெலங்கானா பல்கலைக்கழகங்களில் 3 ஆயிரம்வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன. இதேபோன்று அரசு பள்ளிகளிலும் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர் பணிகள் காலியாகவே உள்ளன. ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் மாணவர்களுக்கும் முதல்வர் கேசிஆர் துரோகம் இழைத்து வருகிறார்.

அரசு மீது ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் கோபம் கொண்டுள்ளனர். கிராம பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி வழங்கி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் மேல் இவ்வாறு நிதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒப்பந்த விலையை வழங்குவோம் என கொடுத்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி உள்ளேன்.

பழங்குடி கிராமங்களுக்கு மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை யையே அமைத்துள்ளது. மத்திய அரசு இத்தனை பணிகளை நிறைவேற்றி காட்டியுள்ளது. ஆனால், மாநில அரசு கடந்த 9 ஆண்டுகளில் என்ன சாதித்தது என்பதை கூற வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 

-th