அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 24 மணி நேரமும் இயங்கும் காணொலி நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்போது 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 21 காணொலி நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை மட்டுமே கவனித்து வருகின்றன.இந்த நீதிமன்றங்கள் இதுவரை 2.4 கோடிக்கும் கூடுதலான வழக்குகளை விசாரித்து உள்ளன. 33 லட்சம் வழக்குகளில் இணையவழியில் ரூ.360 கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்காக 24 மணி நேரமும் இயங்கும் காணொலி நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்காக தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க நீதித்துறை கல்வி நிறுவனங்கள், சட்ட பல்கலைக்கழகங்கள், ஐஐஎம்-கள் மற்றும் ஐஐடி-களை மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வழக்கில் தொடர்புடையவர்கள், வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு நேரில் வருவதைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காணொலி நீதிமன்றங்களை நீதிபதிகள் காணொலி மூலம் நிர்வகிப்பார்கள். அந்த நீதிபதிகளின் அதிகார வரம்பு மாநிலம் முழுவதற்கும் விரிவாக்கப்படுவதுடன் பணி நேரம் 24 மணி நேரமாக (24/7) இருக்கும். காணொலி நீதிமன்றங்களால் வழக்குதாரர், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என யாரும் நீதிமன்றத்துக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் நீதித் துறையின்நேரம் மிச்சமாகும்.
ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, நீதித் துறை பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய சட்ட அமைச்சகம் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதற்காக அமைக்கப்படும் குழுக்கள் புதுமையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. அதன்படி அவ்வப்போது நீதித் துறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-th