வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.

வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில், பருவமழை தற்போது தீவிரமடைந்து டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி 17 செ.மீ. மழை பதிவானது. அதன் பிறகு டெல்லியில் நேற்று ஒரே நாளில் 15.3 செ.மீ. மழை பெய்துள்ளது. 41 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்.

டெல்லியின் முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனையில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வரலாறு காணாத மழையால் டெல்லி அரசு ஊழியர்களின் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நேற்று ரத்து செய்யப்பட்டது. அனைத்து அரசு ஊழியர்களும் மீட்பு நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

ஜம்மு – காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள போஸ்கனா நதியை கடக்க முயன்ற ராணுவ வீரர்கள் தெலு ராம், குல்தீப் சிங் ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. தோடா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து சிக்கியதில் 2 பயணிகள் உயிரிழந்தனர்.

 

 

-th