மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
மேற்கு வங்காளத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.
ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகளும் நடந்தன. முர்ஷிதாபாத் மாவட்டம், வன்முறையின் மையப்புள்ளியாக இருந்தது. மால்டா, உத்தர் தினாஜ்பூர், கூச்பெகர், நடியா, வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள் ஆகிய மாவட்டங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது தாக்கப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.
இந்த வன்முறை தாக்குதல்களுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. தேர்தலின்போது நடந்த வன்முறையால் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த வேட்பாளர் உள்பட 9 பேர், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர், பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர், ஒரு வாக்காளர் ஆகிய 15 பேர் பலியானார்கள்.
இத்துடன், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நடந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்காள மாநில கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ், வடக்கு 24 பர்கானாக்கள், நடியா ஆகிய மாவட்டங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். காயம் அடைந்த ஒருவரின் குடும்பத்தினரை சந்தித்தார்.
”ஒரு கவர்னரிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியுமோ, அதை செய்வேன்” என்று அவர் உறுதி அளித்தார். காயம் அடைந்த நபரை ஆஸ்பத்திரியில் பார்த்தார். பின்னர் கவர்னர் ஆனந்தபோஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு அதிருப்தி அளிக்கிறது. மக்கள் என் காரை நிறுத்தி முறையிட்டனர். தங்களை சுற்றி கொலைகள் நடப்பதாக தெரிவித்தனர். ஓட்டு போட செல்வதை குண்டர்கள் தடுத்ததாக கூறினர்.
தேர்தல் கமிஷன் மவுனம் சாதிக்கிறது. அப்படியானால் சாதாரண மனிதர்களை பாதுகாப்பது யார்? ஓட்டுச்சீட்டு வழியாக தேர்தல் நடக்க வேண்டுமே தவிர, துப்பாக்கி குண்டுகள் வழியாக நடக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். ஜனாதிபதி ஆட்சி மாநில பா.ஜனதா சார்பில், சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. டயர்கள் எரிக்கப்பட்டன. ஊர்வலம் நடத்தப்பட்டது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
-dt