வட மாநிங்களில் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

இமாச்சலப் பிரதேசம், உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பருவமழை தொடங்கி உள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அங்கு 700-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்தன. மணாலி பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே முடங்கினர். இமாச்சலில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இங்கு ரூ.1,132 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் பஞ்சாபின் பல பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பாட்டியாலா மற்றும் தேரா பாஸி ஆகிய பகுதிகளில் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால், பல வாகனங்கள் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பித்தன.

ஹரியாணாவிலும் கனமழை பெய்ததால், அங்குள்ள ஹட்னி குண்ட் தடுப்பணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று நீர்மட்டம் 208.62 மீட்டர் அளவுக்கு எட்டியது. கடந்த 1978-ம் ஆண்டில் யமுனையில் நீர்மட்டம் 207.49 மீட்டரை எட்டியதே அதிக அளவாக இருந்து வந்தது.

தலைநகரில் வெள்ளம்: டெல்லியில் கடந்த 9-ம் தேதி 153 மில்லி மீட்டர் மழை பெய்தது. கடந்த 1982-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் ஜூலை மாதத்தில் இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்ததால், டெல்லி சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.

டெல்லியில் தற்போது மழை இல்லாத நிலையிலும், யமுனை ஆற்று வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கு ஹரியாணாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் வீடு இருக்கும் பகுதி உட்பட டெல்லியின் முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 16,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கும்படி டெல்லி போலீஸாரிடம் முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: வெள்ளம் காரணமாக, டெல்லியில் 3 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் வாகனங்களை தவிர, டெல்லியில் கனரக வாகனங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரிலும் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன. இதனால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யாத்திரை மேற்கொண்ட ஆயிரக்கணக்கானோர் அருகில் உள்ள பகுதிகளில் தங்கியுள்ளனர். வட மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு, கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணியில் 12 குழுக்கள்: டெல்லியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மத்திய டெல்லி, கிழக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒரு குழுவும், தென் கிழக்கு டெல்லியில் இரண்டு குழுக்களும், ஷாதாரா பகுதியில் ஒரு குழுவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் டெல்லி நிர்வாகத்துடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: டெல்லியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள், அவசியத் தேவையற்ற அரசு அலுவலங்கள், கஷ்மீரி கேட் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளின் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடந்த பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. டெல்லி மெட்ரோ ரயில் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

யமுனைகரை மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் இந்த நிலையத்துக்கு மக்கள் நுழைவதும், அங்கிருந்து வெளியேறுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இங்கிருந்து பயணிகள் வேறு இடங்களுக்கு செல்ல மாறிக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யமுனை ஆற்றை கடந்து செல்லும் 4 மெட்ரோ பாலங்களில் ரயில் 30 கி.மீ வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

-th