ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 வெள்ளி – 27 பதக்கங்களுடன் பட்டியலில் 3-வது இடம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. 27 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது.

24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நேற்று நிறைவடைந்தது. இந்த தொடரில் 6 தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 27 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது.

பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதல் இடத்தையும், சீனா 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி, 23.13 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து ஜோதி யாராஜி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

இந்த தொடரில் ஜோதி வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். நடப்பு தொடரில் ஏற்கெனவே மகளிருக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜோதி யாராஜி தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் டி.பி. மனு 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து இவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

மகளிர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபாகதுவா 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

இதேபோல் ஆடவர் 400 மீட்டர்தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய வீரர்கள் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். கடைசி நாளில் மட்டும் இந்திய அணிக்கு 5 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

-th