மணிப்பூரில் மீண்டும் வன்முறை: டயர்களைக் கொளுத்தி பெண்கள் சாலை மறியல்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று (சனிக்கிழமை) மீண்டும் புதிதாக வன்முறை வெடித்தது. காரி பகுதியில் இரு முக்கிய சாலைகளை பெண்கள் முற்றுகையிட்டனர். டயர்களைக் கொளுத்திபோட்டு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீஸார், ராணுவம், அதிரடிப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அந்தப் பகுதியில் தீ வைக்கப்பட்ட டயர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு. அப்பகுதியில் கொடி அணிவகுப்பும் நடத்தினர். காரி பகுதி மட்டுமல்லாமல், அருகில் உள்ள பல பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மணிப்பூர் வன்முறை பின்னணி: மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுவரை அங்கு 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கலவரத்தின் வேர்களைத் தேடினால், அது மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கிய உத்தரவுக்கு இழுத்துச் செல்கிறது.

மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப் பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

சமவெளியில் இருக்கும் மைதேயி சமூகத்தினர் கல்வி, தொழிலில் ஏற்கெனவே முன்னேறிய சமூகமாக அறியப்படுகிறார்கள். அரசியலிலும் இவர்களின் பிரதிநிதித்துவம் அதிகம். அதனால் மலைப்பகுதியில் வசிக்கும் குகி பழங்குடியினர் மைதேயி சமூகத்தினரை பட்டியல் இனத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூக மக்கள் நடத்திய அமைதி பேரணியில், அவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது.

 

 

 

-th