பகுதி நேர வேலைவாய்ப்பு, குறைந்த முதலீட்டு அதிக லாபம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ரூ.700 கோடி மோசடியில் ஈடுபட்ட சீன கும்பலை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சிவி ஆனந்த் கூறியதாவது:
சீனாவிலிருந்து செயல்படும் மோசடி கும்பல் இந்தியாவில் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.700 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது. யூடியூப் வீடியோவை லைக் செய்வது, கூகுளில் விமர்சனங்களை எழுதுவது போன்றவற்றை முதலில் பகுதி நேர வேலையாக தந்து கணிசமான தொகையை வழங்கியுள்ளது.
அதன்பிறகு, குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பல நுாறு கோடி ரூபாயை இந்த கும்பல் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்து பணத்தை ஏமாந்தவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் போலீஸார் சீன மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். இதில், 4 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் அகமதாபாத்தையும், 3 பேர் மும்பையையும் சேர்ந்தவர்கள்.
இந்தியாவிலிருந்து மோசடி செய்யப்பட்ட தொகை கிரிப்டோகரன்சிகளாக மாற்றப்பட்டு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக்குழுவுக்கும் சீன மோசடியாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
துபாய், சீனா போன்ற நகரங்களில் இருந்து ரிமோட் அக்சஸ் மூலம் இந்தியாவில் உள்ள வங்கி கணக்குகளை மோசடி கும்பல் கையாண்டுள்ளது. இந்த கணக்குகளுக்கு வரும் ஓடிபி விவரங்களை பிரகாஷ் பிரஜபதி என்பவர் மோசடி கும்பலிடம் பகிர்ந்துள்ளார். சீன கும்பலுக்கு இந்தியாவில் மேலும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆனந்த் கூறினார்.
-th