காஷ்மீரில் 2 ஆண்டுகளில் நடந்த என்கவுன்ட்டரில் 79 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 79 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2022-ல் பாதுகாப்பு படைகளின் கூட்டு நடவடிக்கையில் 93 உள்ளூர் தீவிரவாதிகள், 36 வெளிநாட்டு தீவிரவாதிகள் என மொத்தம் 129 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஊடுருவல் முயற்சி முறியடிப்பு மற்றும் என்கவுன்ட்டர்களில் இதுவரை 8 உள்ளூர் தீவிரவாதிகள், 27 வெளிநாட்டு தீவிரவாதிகள் என மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஒரு தீவிரவாதியின் உடல் மட்டும் அடையாளம் காணப்படாத நிலையில் இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன், தெஹ்ரிக்-உல்-முஜாகிதீன், அல்-பாதர், கஸ்வத்-உல்-ஹிந்த், இஸ்லாமிக் ஸ்டேட் ஜம்மு காஷ்மீர், லஷ்கர்-இ-முஸ்தபா, லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ட் ஃபிரன்ட்’ (டிஆர்எப்) என பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன.

ஜம்முகாஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 79 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உளவு அமைப்புகளின் இடைவிடாத முயற்சிகளால் உள்ளூர் தீவிரவாதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. உள்ளூர் ஆட்கள் தீவிரவாத அமைப்புகளில் சேருவதும் பெருமளவு குறைந்துள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு படைகளின் கைமேலோங்கியுள்ளது. தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்வோருக்கு எதிரான நடவடிக்கையும் பாதுகாப்பு கட்டமைப்பும் ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க உதவியது. முக்கிய தீவிரவாத அமைப்புகளான ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை தங்கள் உறுப்பினர்கள் பலரை இழந்துள்ளன. இந்த அமைப்புகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதும் மிகவும் குறைந்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

-th