இந்தியாவில் 2019 முதல் 2021 வரை 10 லட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் மாயம்

இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரித்து வெளியிடுகிறது. அதன்படி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2021-ல் மட்டும் 18 வயதுக்கும் மேற்பட் பெண்களில் 3,75,058 பேர் காணாமல் போயியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரவைக்கும் ம.பி., மகாராஷ்டிரா: பெண்கள் காணாமால் போகும் குற்றம் நடைபெறும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இரு மாநிலங்களில் தான் 2019 முதல் 2021 வரை அதிகளவிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 2019-ஆம் ஆண்டு 52,119 பெண்கள், 2020 ஆம் ஆண்டு 52,357 பெண்கள், 2021-ஆம் ஆண்டு 55,704 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிராவில் 2019-ல் 63,167 பெண்கள், 2020-ல் 58,735 பெண்கள், 2021-ல் 56,498 பெண்கள் மாயமாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 2019-ஐ விட 2021-ல் பெண்கள் காணாமல் போன எண்ணிக்கை குறைந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக 2019 முதல் 2021 வரையிலான 3 ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை அடிப்படையில் மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

18 வயதுக்குக்கீழ் உள்ளோர் – 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகள் காணாமல் போனதன் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 13,278 பேர் கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் காணாமல் போயுள்ளனர். இதே ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 90,113 பெண் பிள்ளைகள் (18 வயதுக்கும் கீழ் உள்ளோர்) காணாமல் போயுள்ளனர். நாடு முழுவதும் 2019 முதல் 2021 வரை மொத்தமாக 10,61,648 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதே காலகட்டத்தில் 2,51,430 பெண் பிள்ளைகள் காணாமல் போயினர்.

மாநில அரசுகளின் பொறுப்பு: இது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சட்டம் – ஒழுங்கைப் பேணி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது, குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டியது ஆகியன மாநில அரசுகளின் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலும் பெண்கள், பெண் பிள்ளைகள் காணாமல் போவதென்பது ஆட்கடத்தல் கும்பல்களாலேயே நடைபெறுகிறது. அவர்கள் அப்பெண்களை பாலியல் தொழில் கும்பலிடம் விற்றுவிடுவதே பெரும்பாலும் நடைபெறுகிறது.

 

 

-th