நாடு பற்றி எரியும்போது விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்வது ஏன்…! மோடிக்கு எதிராக புனே முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) மராட்டிய மாநிலம் புனே செல்கிறார். அவர் காலை 11 மணிக்கு புனேவில் உள்ள தக்துசேத் கோவிலில் சாமி தரிசனம் மற்றும் பூஜை செய்கிறார்.
காலை 11.45 மணியளவில் புனேவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் மோடிக்கு லோக்மான்யா திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் திலகரின் நினைவு நாளான ஆகஸ்ட் 1-ந் தேதி லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. திலக் சமர்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் 41-வது திலகர் தேசிய விருதை மோடி பெறுகிறார்.
இதற்கு முன் இந்த விருதை முன்னாள் ஜனாதிபதிகள் டாக்டர் சங்கர் தயாள் சர்மா, பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், இந்திரா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் என்.ஆர். நாராயண மூர்த்தி, ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் பெற்று உள்ளனர்.
புனே நகர இளைஞர் காங்கிரசால் நகரம் முழுவதும் சாலையோரங்களிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் ‘கோ பேக் மோடி’, ‘பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லுங்கள் , நாடாளுமன்றத்தை எதிர்கொள்ளுங்கள்’ என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. மேலும் சில போஸ்டர்களில், ‘நாடு பற்றி எரியும்போது விருது வழங்கும் விழாக்களில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்?’, ‘கோ பேக் மோடி என குறிப்பிடப்பட்டு உள்ளது.
-dt