அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும்: உச்ச நீதிமன்றம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக கடந்த ஆக.2ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், “செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியான நடவடிக்கை.

அதேபோல குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)ன்- கீழ் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது. அது நீதிமன்ற காவலாகவும் இருக்கலாம் என்ற புரிதலின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.

மேலும் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும் போது 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுப்பம் ஜே குல்கர்னி என்ற வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது. எனவே அந்த குறிப்பிட்ட விவகாரத்தை மட்டும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அமலாக்கத் துறையினர் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செந்தில் பாலாஜியின் உடல் நலத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார். இதனையடுத்து நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

-th