இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் 5 நிருபர்கள், சர்வதேச அரங்கில் சீனாவின் திரைமறைவு நடவடிக்கைகள் தொடர்பாக புலனாய்வு செய்து விரிவான செய்தியை தயார் செய்துள்ளனர். இந்த செய்தி கடந்த 5-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. இதில், சீனாவுக்கு சாதகமாக செயல்பட இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் சீனாவுக்கு சாதகமாக செயல்பட அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சீன தரப்பில் பெரும் தொகை அள்ளி வீசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியின் சுருக்கம் வருமாறு:
கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ‘‘நோ கோல்டு வோர் குரூப்’’ என்ற அமைப்பு திடீர் போராட்டங்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டது. இங்கிலாந்தில் ஆசிய வம்சாவளியை சேர்ந்த மக்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தியது.
இதே ‘‘நோ கோல்டு வோர்குரூப்’’ அமைப்பினர் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. பருவநிலை மாறுபாட்டை தடுப்பது, இனவெறி தாக்குதல்களை தடுப்பது ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படுவதாக அமைப்பின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நடத்திய புலனாய்வில், ‘‘நோ கோல்டு வோர் குரூப்’’ அமைப்பு சீனாவின் பினாமி அமைப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் நிதியுதவி செய்து வருகிறார். இலங்கை வம்சாவளியை சேர்ந்த இவர் சீன அரசின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘‘தாட்வோர்க்ஸ்’’ என்ற சாப்ட்வேர் நிறுவனத்தையும் பல்வேறு அறக்கட்டளைகளையும் சிங்கம் நடத்தி வருகிறார். இவர் பெரும்பாலான நாட்கள் சீனாவின் ஷாங்காய் நகரில் முகாமிட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மற்றும் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்த நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் ஓர் அரசியல் கட்சி,அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஜாம்பியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்களுக்கு அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறார்.
இந்தியாவில் ‘நியூஸ்கிளிக்’ என்ற ஊடகத்துக்கு அவரது சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த ஊடகம் சீனாவுக்கு ஆதரவான, சாதகமான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் சோஷலிஸ்ட் புரட்சிகர தொழிலாளர் கட்சிக்கு தொழிலதிபர் சிங்கம் தரப்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த கட்சியின் தலைவர்களும் சீனாவுக்கு ஆதரவான கருத்துகளை கூறி வருகின்றனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மொழிகளில் சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட தொழிலதிபர் சிங்கம் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறார். இதுதொடர்பாக தனது நிறுவனங்கள், நண்பர்கள் வாயிலாக அவர் காய்களை நகர்த்தி வருகிறார்.
கடந்த மே மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் நெவில் ராய் சிங்கம் கலந்து கொண்டார். அந்தகூட்டத்தில் சீனாவில் ஆட்சி நடத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் யூ யுன்குவானுக்கு அருகில் சிங்கம் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க தொழிலதிபர், சமூக சீர்த்திருத்தவாதி என்ற பெயரில் சீனாவின் ரகசிய தூதராக அவர் செயல்பட்டு வருகிறார். உலகம் முழுவதும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ஆதரவான செய்திகளை வெளியிட நெவில் ராய் சிங்கம் அதிதீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-th