மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகங்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தில் முரே பகுதியில் வசிக்கும் தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடான மியான்மர், ஆங்கிலேயரின் காலனி நாடாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது 1942-ல் ஜப்பானிய படை மியான்மருக்குள் நுழைந்தது. ஆங்கிலேய, ஜப்பானிய படைகளுக்கு இடையே கடுமையான போர் நீடித்தது. கடந்த 1945-ல் ஜப்பானிய படை வென்று ஆட்சி அமைத்தது. இதன்பிறகு கடந்த 1948-ம் ஆண்டு மியான்மர் சுதந்திர நாடாக உருவெடுத்தது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது மியான்மரில் லட்சக்கணக்கான இந்தியர்கள் குடியமர்த்தப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆவர். மியான்மர் சுதந்திரம் அடைந்த பிறகும் தமிழர்கள் அங்கேயே வசித்தனர். கடந்த 1962-ல் மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அப்போது தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அப்போதைய மத்திய அரசு, கப்பல்கள் மூலம் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வந்தது.

சில ஆயிரம் தமிழர்கள் தரைமார்க்கமாக இந்தியாவின் மணிப்பூரின் சாண்டல் மாவட்டம், முரே நகரில் குடியேறினர். அடுத்த சில ஆண்டுகளில் மியான்மர் எல்லையில் அமைந்துள்ள முரே நகரை, தமிழர்கள் வணிக மையமாக மாற்றினர்.

இன்றளவும் முரேவில் இருந்து துணி வகைகள், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், மின் சாதனங்களை மியான்மருக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். தமிழர்களின் வணிகத்தால் முரே நகரம் அபாரமாக வளர்ச்சி அடைந்தது.

தற்போது மத்திய அரசின் முயற்சியால் மணிப்பூரின் முரே நகரில் இருந்து மியான்மர் வழியாக தாய்லாந்தில் உள்ள மே சோட்டுக்கு 1,400 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையேயான வணிகம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பன்னாட்டு வணிகத்தை முரே நகரில் வசிக்கும் தமிழர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் மணிப்பூரின் மைத்தேயி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கலவரம் பரவியுள்ள நிலையில், முரே நகரம் போர்க்களமாக மாறியிருக்கிறது.

மைத்தேயி, குகி ஆகிய சமூகங்களில் யார் பக்கமும் சாயாமல் தனித்து நிற்கும் தமிழர்களின் வீடு, உடைமைகள் இருதரப்பினராலும் சூறையாடப்பட்டு வருகின்றன. முரே நகரில் தமிழர்கள் கட்டிய கோயில்களும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

3,000 தமிழர்கள்: மைத்தேயி, குகி, நாகா, மிசோ உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் தமிழர்களுக்கு எதிராக அவ்வப்போது கலவரத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. உயிருக்கு அஞ்சி தமிழர்கள் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு காலத்தில் முரே நகரில் சுமார் 17,000 தமிழர்கள் வசித்தனர். தற்போது 3,000 தமிழர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் முரே தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசும் மணிப்பூர் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டி மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வடகிழக்கின் முன்னணி ஊடகங்கள் வலியுறுத்தி உள்ளன.

 

 

-th