கிராமங்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் ஹரியாணா பஞ்சாயத்து தலைவர்களின் கடிதங்களால் சர்ச்சை

ஹரியாணாவின் 3 மாவட்டங்களின் 50 கிராமங்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் பஞ்சாயத்து தலைவர்களின் கடிதங்களால் சர்ச்சை உருவாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹரியாணாவின் நூ பகுதியில் கடந்த ஜூலை 31-ம் தேதி உருவான மதக் கலவரம் முடிவுக்கு வந்து அங்கு அமைதி திரும்பி வருகிறது. நூ, குருகிராம் மற்றும் பல்வல் மாவட்ட கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் தொடர்கிறது.

இச்சூழலில், ஹரியாணாவின் ரிவாரி, மகேந்திரகர், ஜஜ்ஜர் ஆகிய மாவட்டங்களின் 50 கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் சர்ச்சைக்குரிய ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளனர். அவர்களின் கையொப்பத்துடன் கூடிய இக்கடிதங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மூன்று மாவட்டங்களின் 50 கிராமங்களில் காய்கறி உள்ளிட்ட இதர வியாபாரங்களுக்காக முஸ்லிம் வியாபாரிகள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்தக் கடிதங் களில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகேந்திரகர் மாவட்ட உதவி ஆட்சியர் மனோஜ் குமார் கூறும்போது, “இந்தக் கடிதங்களை நாங்கள் சமூக வலைதளங்களில் பார்த்தோம். இதுபோல் குறிப்பிட்டு கடிதங்களை அனுப்புவது சட்டவிரோதம் ஆகும். இக்கிராமங்களில் 2 சதவீதத்திற்கும் குறைவான முஸ்லிம்களே வசிக்கின்றனர்.

இவர்களுடன் அனைத்து மதத்தினருடம் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். எனவே, இந்தக் கடிதம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

குருகிராமில் கலவரத்தால் சுமார் 5,000 வியாபாரிகள் வெளியேறி விட்டனர். இவர்கள் ஐ.டி. நகரமான இங்கு பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை, சாலையோர உணவகங்கள், இதர பொருட்கள் விற்கும் கடைகளை நடத்தி வந்தனர்.

இவர்கள் உ.பி.யின் அலிகர், மீரட், பிஜ்னோர், முராதாபாத், முசாபர்நகர், எட்டாவா போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள். எனினும், இவர்களில் பலர் எந்த அச்சமும் இன்றி தங்கள் வியாபாரத்தை தொடர்கின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் குருகிராம் வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் ராஜேந்திர சரோஹா கூறும்போது, “சுமார் 40,000 வியாபாரிகளில் 16,000 மட்டுமே மாநகராட்சி பதிவு பெற்றவர்கள். இங்கு 40 சதவீதம் உள்ள முஸ்லிம் வியாபாரிகளிடம் பாதுகாப்புக்கு இனி நாங்கள் பொறுப்பு எனத் தைரியம் கூறியும் அச்சமுற்று வெளியேறுகின்றனர்” என்றார்.

மத்தியபிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டம், தவுரா கிராமப் பஞ்சாயத்தினரும், சர்ச்சைக்குரிய பதாகைகளை வைத்துள்ளனர்.

அதில், “முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வியாபாரிகள் கிராமத்தில்நுழையக்கூடாது, வேறு வேலைகளுக்காக இங்கு வரும் இம்மதத்தினர், தங்கள் ஆதார் அல்லது அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதம் என எச்சரிப்பு: இதற்கு லவ் ஜிகாத், மத மாற்றம் போன்ற விவகாரங்களே காரணம் என்று அக்கிராமப் பஞ்சாயத்தின் தலைவரும், பாஜக விவசாயப் பிரிவின் மாவட்ட தலைவருமான பப்லு யாதவ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் படங்களுடன் சமூக வலைதளங்களில் பரவி, மாவட்ட நிர்வாகத்தால் பதாகைகள் அகற்றப் பட்டுள்ளன. அரசு அதிகாரிகளை தவுரா கிராமத்திற்கு அனுப்பி அவர்கள் செய்வது சட்டவிரோதம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

-th