தேச விரோத செய்திகளைப் பரப்ப சீனாவிடமிருந்து நிதி உதவி: நியூஸ்கிளிக் நிறுவனம் மீதான விசாரணை தீவிரம்

இந்திய செய்தி நிறுவனமான நியூஸ்கிளிக், சீனாவிடமிருந்து நிதி பெற்று செயல்பட்டதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் மீதான விசாரணையை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது.

இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’, நியூஸ் கிளிக் நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை நியூஸ்கிளிக் நிறுவனம் மீதான தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

நியூஸ்கிளிக் நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தாவுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்புள்ள வீட்டையும் ரூ.41 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நியூஸ்கிளிக் நிறுவனத்தின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமலாக்கத் துறை கூறுகையில், “2018 முதல் 2021 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களிடமிருந்து நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு ரூ.86 கோடி நிதியுதவி வந்துள்ளது. நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்களை ஆய்வு செய்கையில், சீன ஆதரவாளர் நெவில் சிங்கத்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

-th