பொது சிவில் சட்டத்தால் இந்து – முஸ்லிம் பிளவு ஏற்படாது

பொது சிவில் சட்டத்தால் இந்து-முஸ்லிம் பிளவு ஏற்படாது என்றும், இந்த சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் மிகவும் வரவேற்பார்கள் என்றும் கூறுகிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன். மேலும், பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதுதான் வகுப்பு வாதமே தவிர, கொண்டு வர வேண்டும் என்பது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்து தமிழ் திசை இணையதளத்துக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் தொகுப்பு இது.

பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெண்களுக்கு அதிக பலன் கிடைக்கும். 1989ல் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தார். பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்றது அந்த சட்டம். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு, கிறிஸ்தவ பெண்களுக்கு அதன்படி சொத்து கிடைத்ததா என்றால் இல்லை. ஏனெனில், அவர்கள் இந்த சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். அப்படி என்றால், அந்த சட்டமே, இந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம் என்ற பெயரில் கருணாநிதி கொண்டு வந்திருக்க வேண்டும். பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் என்று கொண்டு வந்திருக்கக்கூடாது.

குறிப்பாக, பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் பெண்கள் மிகவும் வரவேற்பார்கள். பொது சிவில் சட்டம் வந்துவிட்டால், ஒரு முஸ்லிம் ஆண் 4 திருமணம் செய்து கொள்ள முடியாது அல்லவா? எந்த முஸ்லிம் பெண்ணும் தனது கணவன் இன்னும் 3 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்க மாட்டார்கள். எனவே, இந்த சட்டம் வந்தால் முஸ்லிம் சகோதரி மகிழ்வார். முத்தலாக் பண்ண முடியாது; விவாகரத்து நிகழ்ந்தால், இந்து பெண்ணுக்கு என்ன ஜீவனாம்ச உரிமை உண்டோ அது முஸ்லிம் பெண்ணுக்கும் கிடைக்கும். சொத்தில் பங்கு கிடைக்கும். எனவே, பெண்கள்தான் இதில் அதிக பலன்பெறக்கூடியவர்கள். எனவே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆதரிப்பார்கள்.

பொது சிவில் சட்டம் வந்தால், இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு இருக்கும் வருமான வரிச்சலுகை பாதிக்கப்படும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்து கூட்டு குடும்ப முறை கணக்கின் கீழ் வருமான வரிச்சலுகை பெறக்கூடியவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கும். கூட்டுக் குடும்ப முறை என்பது நாட்டில் மிக வேகமாக மாறி இருக்கிறது. சிலர் வருமான வரிச்சலுகைக்காக கூட்டுக் குடும்ப கணக்கை வைத்திருக்கிறார்கள்.

நாடு ஒரு பொதுவான முறையை நோக்கி செல்லும்போது சிலருக்கு சிரமம் இருக்கும். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோதுகூட, அதிக நிலம் வைத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். நான்கு வழிச் சாலையை உருவாக்கும்போது சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து அரசு நிலத்தை கையகப்படுத்தியதால், பலர் பாதிக்கப்பட்டார்கள். பொது நலன் கருதி இதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அதுமட்டமல்ல, இந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லையே.

பொது சிவில் சட்டம் வந்தால் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் இருக்கிறது. முதலில் பொது சிவில் சட்டம் குறித்த வரைவு மசோதா வெளிவரட்டும். தற்போது அந்த வரைவு மசோதாவை சட்ட ஆணையம் தயாரித்து வருகிறது. ஆனால், அது எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அது அறிமுகப்படுத்தப்படலாம். அப்போது, அந்த வரைவு மசோதா பொது விவாதத்திற்கு விடப்படும். அப்போது எல்லோரும் கருத்து சொல்வார்கள். பழங்குடி மக்களும் தங்கள் கருத்தைச் சொல்வார்கள். அப்போது இதனை பார்த்துக்கொள்வோம். வரைவு மசோதா வருவதற்கு முன் ஏன் அதனை எதிர்க்க வேண்டும்?

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விஷயம் என்பது மிக நீண்ட நடைமுறையைக் கொண்டது. தடாலடியாக செய்யக்கூடிய ஒன்று அல்ல. வரைவு மசோதா வந்த பிறகும்கூட அதில் மாற்றங்கள் ஏற்படலாம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் இந்தசட்டத்தைக் கொண்டு வர பாஜக விரும்புகிறது. பெரும்பான்மை – சிறுபான்மை அடிப்படையில் இது திணிக்கப்படாது. மக்கள் இதை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடியே தொடங்கி வைத்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டே அவர் இது குறித்துப் பேசிய இருப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தலுக்காகத்தான் இதை செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால், அமல்படுத்துபவர்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றால், இந்த சட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் என்றுதானே அர்த்தம். இதனால் இந்து – முஸ்லிம் இடையே பிளவு ஏற்படுமா என்றால், நிச்சயம் ஏற்படாது. ஆனால், காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் இது மக்களை பிளவுபடுத்தும் என்றுதான் பிரச்சாரம் செய்வார்கள். அவர்களுக்கு முஸ்லிம்களின் பிரதிநிதி என்றால், எல்லை காந்தி என்று சொல்லப்பட்ட கான் அப்துல் கபார் கானோ, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆசாத்தோ, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமோ அல்ல. அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் பிரதிநிதி என்றால், சையத் அகம்மது கான், முகம்மது அலி ஜின்னா ஆகியோர்தான். காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட்களும் எப்போதுமே பிரிவினைவாதிகளையும் அடிப்படைவாதிகளையுமே ஆதரிக்கிறார்கள்.

இந்து – முஸ்லிம் பிரச்சினை எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இதற்குக் காரணம். அயோத்தி ராமர் கோயில் விஷயத்திலும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது எத்தனை இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது? ஒரு சின்ன ஆர்ப்பாட்டமாவது நடந்ததா? ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகியவை பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, பொது சிவில் சட்டம் வந்தால் இந்து-முஸ்லிம் வெறுப்பு ஏற்படாது. எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

 

 

 

-th