திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று, அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் திருமலைக்கு நடைபாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருப்பதிக்கு வந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு பெற்றோருடன் லக்ஷிதா (6) தனது பெற்றோருடன் திருமலைக்கு மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே பெற்றோருக்கு சற்று முன் நடந்து சென்றுக்கொண்டிருந்த லக்ஷிதாவை திடீரென வந்த சிறுத்தை ஒரு புதருக்குள் அடித்து இழுத்துச் சென்றது. தமது கண் முன் மகளை சிறுத்தை இழுத்து செல்வதை பார்த்து பெற்றோர் அலறி கூச்சலிட்டனர். சக பக்தர்கள் சிறுத்தையை பின் தொடர்ந்தனர்.
இது குறித்து இரவே திருப்பதி வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், இரவு நேரம் என்பதால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காலை மீண்டும் அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் சிறுமி லக்ஷிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சற்று தூரத்தில், சிறுமி லக்ஷிதாவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. சிறுமியின் உடல் பாதிதான் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீதி பாகத்தை சிறுத்தை உட்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தனது மகளின் சடலத்தை கண்டு பெற்றோர், உறவினர் கதறி அழுதனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோருடன் இதே போன்று திருமலைக்கு மலையேறி சென்றுக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்விக்கொண்டு ஓடியது. ஆனால், பெற்றோர், பக்தர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சிறுத்தையை துரத்தியபடி ஓடிச்சென்றதால், அது சிறுவனை ஒரு புதர் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியது. பின்னர் அந்த சிறுத்தையை தேவஸ்தானத்தினர் பிடித்து மீண்டும் வனப்பகுதியிலேயே விட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையில் உள்ள நடைபாதையில் இருபுறமும் இரும்பு வேலி அமைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அப்போதைய அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி ஆகியோர் அறிவித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தினால், ஒரு சிறுமியின் உயிர் போயுள்ளது என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளையும், அவர்களின் அலட்சியப் போக்கையும் கண்டித்துள்ளனர்.
-th