இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்ற, டி20 கிரிக்கெட்டில் வலுவான மே.இ.தீவுகளிடம் தோற்றதில் இந்திய அணிக்கு அவமானம் ஒன்றும் இல்லை என்றாலும், சில இளம் வீரர்களிடம் தீப்பொறி இல்லை.
ஐபிஎல் பணத்தினால் கோடிகளில் புரள்கின்றனர், அதனால் நாட்டுக்கு ஆடும்போது ஆர்வம் குன்றிக் காணப்படுகின்றனர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
தி இந்து ஸ்போர்ட் ஸ்டாரில் அவர் எழுதியுள்ள பத்தியின் விவரம்: இந்திய அணி, மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் 2 போட்டிகளில் தோற்றது. பிறகு எழுச்சி கண்டு அடுத்த 2 போட்டிகளில் வென்றது, ஆனால் கடைசி போட்டியின் போது இந்தியாவுக்குத் திரும்பும் எண்ணத்தினால் மனம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். இதனால் தீவிரம் குறைந்திருக்கும்.
சில சீனியர் வீரர்கள் இல்லாததால் இந்திய அணி முழு வலு கொண்ட அணி என்று கொள்ள முடியாது. சிலர் நன்றாக ஆடினாலும் இன்னும் சிலரது ஆட்டம் ஏமாற்றமளித்தது. உயர் மட்ட கிரிக்கெட்டில் பொறுமை என்ற விஷயம்தான் பெரிய வீரர்களிடமிருந்து சிறிய வீரர்களை பிரித்துக் காட்டுவதாகும். சர்வதேச போட்டி என்பது பெரிய சவாலான ஒரு விடயமாகும்.
தனியார் கிரிக்கெட்டில் ஒரு வீரர் சிறப்பாக ஆடிவிடலாம். ஆனால் சர்வதேசப் போட்டியில் நாட்டுக்காக ஆடும்போது வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். ஐபிஎல்-ஐ விட ஒரு அடி முன்னெடுத்து வைக்க வேண்டும். யு-19 கிரிக்கெட்டில் பிரமாதமாக ஆடும் சில வீரர்கள் ஏன் பெரிய லெவல் கிரிக்கெட்டில் சோபிக்க முடியவில்லை என்பதை நாம் பார்க்கிறோமே.
தனியார் கிரிக்கெட்டில் சோபிக்கும் இளம் வீரர்கள் கோடிகளில் புரள்வதால் பெரிய லெவல் கிரிக்கெட்டிற்கு வரும்போது தீப்பொறி பறப்பதில்லை, அவர்கள் தனியார் கிரிக்கெட்டில் தங்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதில்தான் குறியாக உள்ளனர். அப்படி தனியார் கிரிக்கெட்டில் பணம் குறைந்தாலும் அதுவே பரவாயில்லை என்றே கருதுகின்றனர். மகிழ்ச்சியுடன் அதில் ஆடுகின்றனர்.
ஆம், குழந்தைகள் குழந்தைகளுக்கு எதிராக ஆடும்போது நாம் ஆகா கிரேட் என்று கருதுவோம், ஆனால் அதே குழந்தை பெரிய அணியில் ஆடும்போது சிக்கல்கள் வெளிப்படையாகத் தெரியும்.
அதனால்தான் பையன்களாக ஆடும் மட்டத்தில் கலக்கும் வீரர்கள் சிலர் சீனியர் மட்டத்தில் சொதப்புவதை நாம் பார்க்கிறோம். வெஸ்ட் இண்டீஸிடம் டி20 தொடரில் தோற்றது ஒன்றும் அவமானகரமானதல்ல, அவர்கள் இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! மேலும் டி20-யில் அவர்கள் இப்போதும் டாப் கிளாஸ்தான்.
அவர்களின் வீரர்கள் இன்று தனியார் கிரிக்கெட்டில் பல அணிகளில் மேட்ச் வின்னர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இந்தத் தொடருக்காக ஓய்வு அளிக்கப்பட்ட வீரர்கள் நீண்ட காலம் ஆடப்போவதில்லை, எனவே அவர்கள் இடத்தில் நல்ல வீரர்களை கொண்டு வருவது அவசியம் ஏனெனில் அடுத்த டி20 உலகக்கோப்பையும் நம் கண்களில் தெரிகிறது என்று அந்தப் பத்தியில் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-th