இந்திய – சீன ராணுவப் பேச்சுவார்த்தை: எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண ஒப்புதல்

இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே கார்ப்ஸ் கமாண்டர் அளவில் நடைபெற்ற 19-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 13-14 தேதிகளில் கார்ப்ஸ் கமாண்டர் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய எல்லையில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: “மேற்குப் பிராந்தியத்தில் LAC பகுதியில் இன்னும் தீர்க்கப்படாமல் மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரு தரப்பினரும் நேர்மறையான, ஆக்கபூர்வமான, ஆழமான விவாதம் நடத்தப்பட்டது.

தலைமை வழங்கிய வழிகாட்டுதலுக்கு இணங்க, அவர்கள் வெளிப்படையான, முன்னோக்கிச் செல்லக்கூடிய விதத்தில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள பிரச்சினைகளை விரைவான முறையில் தீர்ப்பதற்கு ஏற்ப, ராணுவ மற்றும் ராஜதந்திர வழிகள் மூலம் பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இடைப்பட்ட காலத்தில், எல்லைப் பகுதிகளில் அமைதி நிலைநாட்ட இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு இந்தியத் தரப்பில் லேயை தளமாகக் கொண்ட 14 கார்ப்ஸின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் (ஜிஓசி) லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமை வகித்தார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒரு நாள் மட்டுமே நடைபெற்ற நிலையில், இம்முறை இரண்டு நாட்கள் பேச்சுவா்த்தை நடந்துள்ளன. கடந்த 18-வது சுற்றுப் பேச்சுவார்த்தையை அடுத்து கூட்டறிக்கை வெளியிடப்படாத நிலையில், இம்முறை கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீர்களும் மோதிக்கொண்டதை அடுத்து, உறுதி செய்யப்படாத எல்லைப் பகுதிகளை உறுதிப்படுத்தும் நோக்கிலும், அமைதியை நிலைநாட்டும் நோக்கிலும் கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எல்லை உறுதிப்படுத்தப்படாத 5 பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது என்ற முடிவு இத்தகைய பேச்சுவார்த்தைகளின் மூலம் எடப்பட்டுள்ளது. கால்வான், பாங்காங் த்சோவின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள், கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியின் ரோந்துப் புள்ளிகள் (பிபி) 15 மற்றும் 17 ஏ, டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக் ஆகியவற்றில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், ஆகஸ்ட் 22-24 தேதிகளில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் இரு தலைவர்களும் கலந்து கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களின் சந்திப்புகளுக்கு முன்னதாக எல்லையில் இரு தரப்புக்கும் இடையே முன்னேற்றம் எட்டப்படும் என்று நம்பப்படுகிறது.

 

 

-th