கேரளாவில் அடுத்த 2 மாதங்களுக்கு மழை குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், வறட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதங்களுக்கு குறைந்த அளவு மழை மட்டுமே பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, 44 சதவீதத்திற்கும் குறைவான மழையே பதிவாகியுள்ளது.
இடுக்கியில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்துள்ளது. வயநாட்டில் 55 சதவீதமும், கோழிக்கோடு மாவட்டத்தில் 53 சதவீதமும் மழை குறைந்துள்ளது. இதனால், அணைகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
மின்சார வாரியத்திற்கு சொந்தமான அணைகளில், 37 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கியில், கடந்த ஆண்டுகளில் 70 சதவீதம் நீர் இருந்த நிலையில், தற்போது 32 சதவீதமாக உள்ளது. தற்போது 54 அடிக்கு குறைவாக உள்ள நிலையில், நீர்மட்டம் உயரவில்லை என்றால் மின் உற்பத்திக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.
அடுத்த 2 மாதங்களுக்கு மழை குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், வறட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
-dt