கனமழை மற்றும் நிலச்சரிவால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலில் சம்மர் ஹில் பகுதியில் நேற்று முன்தினம் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானோர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 21 பேர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 60-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: நிலச்சரிவு ஏற்பட்ட பல இடங்களை நேரில் பார்வையிட்டேன். தற்போது நான் காங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 800-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் காங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன்பு இது போன்ற பேரழிவு ஏற்பட்டது இல்லை.
மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநிலத்தின் உள் கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஒரு ஆண்டு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் உத்தராகண்டில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிம்லா மாவட்ட ஆட்சியர் ஆதித்யா நெகி கூறும்போது, “நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்மர் ஹில், கிருஷ்ணா நகர் பகுதியில் 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன” என்றார்.
உத்தராகண்டின் ருத்ரபிரயாகை மாவட்டத்திலுள்ள மத்மகேஸ்வர் தாம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கனமழை பெய்து அவர்களால் கோயிலை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அருகில் இருந்த பாலம் உடைந்ததால் அவர்கள் நடுவழியில் சிக்கித் தத்தளித்தனர். இதையடுத்து சிக்கித் தவித்த 50 பக்தர்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
-th