மணிப்பூரில் ஆயுதக்குழு வன்முறை, குகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலத்தின் மலை கிராமம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றால் குகி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகா பழங்குடினரான தாங்குல்ஸ் ஆதிக்கம் செலுத்தும், உக்ருல் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 47 கிமீ தள்ளியிருக்கும் குகி பழங்குடியினர் வசிக்கும் தவுவாய் குகி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.வஷூம் கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று கிரமாத்தின் கிழக்கேயுள்ள மலைப்பகுதியில் இருந்து இறங்கி கிராமத்தை நெருங்கி கிராமக் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் இல்லை. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநில போலீஸாரும், இந்திய ராணுவமும் இணைந்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த மாதம் 5-ம் தேதி, பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் இரண்டு சமூகங்களுக்கு இடையே நடந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மூன்று மைத்தேயி மற்றும் 2 குகி சமூகத்தினர் கொல்லப்பட்டனர்.

மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி இனத்தையும், 40 சதவீதம் பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து கோரியதில் அவர்களுக்கும் நாகா உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வன்முறை சம்பவங்களில் 160 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே மே 4-ம் தேதி தொடங்கிய வன்முறையின்போது குகி ஸோ பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

-th