ஆவணங்கள் சரியில்லாததால் தெலுங்கு மாணவர்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவிற்கு மேற்கல்வி படிக்க சென்ற 21 மாணவ, மாணவிகள் ஆவணங்கள் சரியில்லை எனும் காரணத்தினால் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்வி பயில ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் செல்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் இருந்து உரிய அழைப்பு வந்தும், விசா கிடைத்தும் அமெரிக்காவுக்கு பல கனவுகளோடு சென்ற 21 மாணவ, மாணவியர், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, அட்லாண்டா போன்ற விமான நிலையங்களில் இமிக்ரேஷன்(குடியேற்றப்பிரிவு) அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கொண்டு வந்த, ஆவணங்கள் சரியில்லை என தீர்மானித்து கடந்த வியாழக்கிழமை அவரவர் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். பெற்றோர்கள் இன்றி, தன்னந்தனியாக பல கனவுகளை சுமந்தபடி, ஆசை ஆசையாய், அமெரிக்க மண்ணில் கால் பதித்த இவர்களின் கனவு சில நிமிடங்களில் தவிடு பொடியாகி உள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் மணிக்கணக்கில் பல கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்த அதிகாரிகள், இறுதியில் 21 மாணவ, மாணவியரை அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். அமெரிக்க பாஸ்போர்ட் சட்டத்தின் படி, ஒருவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், அவர்கள் 5 ஆண்டுகள் வரை மீண்டும் அமெரிக்காவுக்கு வர முடியாது.

ஆதலால், திரும்பி வந்துள்ள 21 மாணவர்களின் கனவு நிரந்தரமாக தகர்ந்து விட்டது என்றே கூறலாம். இதனை அறிந்த இந்தியவெளியுறவு துறை இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு அமெரிக்க தூதரகத்தை கேட்டுள்ளது.

 

 

-th