பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த போலி ஏஜென்டுகள், இத்தாலியில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களுக்கு வலை விரித்துள்ளனர். அதில் 17 இளைஞர்கள், வேலைக்காக வெளிநாடு செல்ல முன்வந்துள்ளனர்.
அவர்களிடம் தலா ரூ.13 லட்சத்தை போலி ஏஜென்டுகள் கட்டணமாக வசூலித்துள்ளனர். ஆனால், இத்தாலிக்கு அனுப்பாமல், துபாய்க்கு சட்டவிரோதமாக அந்த இளைஞர்களை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 17 பேரும் லிபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள மாபியா கும்பல் அவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டது.
லிபியாவின் ஜுவாரா நகரில் அவர்கள் உணவு உட்பட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் துன்புறுத்தப்பட்டனர். இதுகுறித்து 17 இளைஞர்களின் குடும்பத்தார் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு கடாபி ஆட்சிக்குப் பிறகு, அங்கு அரசியல் குழப்பம் நிலவுகிறது. மேலும், மாபியா கும்பல் ஆட்களை கடத்தி பெரும் தொகையை கேட்டு மிரட்டி வருகிறது. இதனால் லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இருந்த இந்திய தூதரக அலுவலகம், பாதுகாப்பு கருதி தற்காலிகமாக துனிசியாவின் தலைநகர் துனிஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. இதனால், 17 இந்திய இளைஞர்கள் லிபியாவில் சிக்கிய தகவல் துனிஸ் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருடன் துனிஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தனர். மேலும், லிபியா அரசு அதிகாரிகளிடம் இந்திய தூதரகமும், டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் நேரடியாக தலையிட்டு, 17 இளைஞர்களை மீட்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து மாபியாக்களின் பிடியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கான விமானக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டது.
-th