40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது: மக்கள் நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணத்துக்கு பிறகு, நிலவின் தென் துருவத்தில் நாளை மாலை தரையிறங்க உள்ளது. இதை பொதுமக்கள் நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்செலுத்தப்பட்டது. அதன்பிறகு, பூமியை சுற்றிவந்த விண்கலம் கடந்த ஆக.1-ல்புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. ஆக. 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.

பின்னர், சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டது. நிலவில் இருந்து 153 கி.மீ உயரத்தில் இருக்கும்போது சந்திரயானின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் பாகம் 17-ம் தேதி பிரிக்கப்பட்டது. அதன்பின் உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்றுப்பாதையில் வலம் வந்தன.

நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமான சுற்றுப்பாதையில் லேண்டர் தற்போது இயங்கி வருகிறது.

நிலவில் தரையிறங்குவதற்கான பகுதிகள் குறித்த புகைப்படங்களை லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவி அவ்வப்போது படம் பிடித்து அனுப்பி வருகின்றன. கடினமான பாறைகள், ஆழமான குழிகள் இல்லாத பாதுகாப்பான பகுதிகளை கண்டறிந்து, நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நாளை (ஆக.23) மாலை மேற்கொள்ளப்பட உள்ளன.

எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். தொடர்ந்து லேண்டர் தனது உட்புற சோதனைகளை செய்து கொண்டு தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காக காத்திருக்கும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் நாளை மாலை 6.04-க்கு தரையிறங்கும்.

நேரலையில் காணலாம்: இந்த காட்சிகளை நேரலையில் காண்பதற்கான ஏற்பாட்டை இஸ்ரோ செய்துள்ளது. அதன்படி, https://isro.gov.in என்ற இணையதளம், https://youtube.com/watch?v=DLA_64yz8Ss என்ற யூ-டியூப் பக்கம், https://facebook.com/ISRO என்றமுகநூல் பக்கம், டிடி நேஷனல் தொலைக்காட்சி ஆகியவற்றில் நாளை மாலை5:27 மணி முதல் பொதுமக்கள் காணலாம். லேண்டர் தரையிறங்கிய பிறகு, அதில் உள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து தனது ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.

நிலவில் லேண்டர் விண்கலத்தை தரையிறக்குவதுதான் இத்திட்டத்திலேயே சவாலான பணி. இதற்கு 15 நிமிடம் மட்டுமே ஆகும் என்றபோதிலும், 4 ஆண்டுகால உழைப்புக்கான முழு வெற்றியும் அதில்தான் அடங்கியுள்ளது. கடந்த முறை சந்திரயான்-2 திட்டம் இந்த கட்டத்தில்தான் தோல்வியை சந்தித்தது. அந்த அனுபவங்களின் அடிப்படையில், சந்திரயான்-3 லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த முறை லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ரஷ்யாவின் லூனா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் விழுந்து நொறுங்கிய நிலையில், சந்திரயானின் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

‘வருக நண்பா!’: இஸ்ரோ கடந்த 2019-ல் அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர்,தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அதற்கும், தற்போது அங்கு சென்றுள்ள சந்திரயான்-3 லேண்டருக்கும் தகவல்தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘Welcome, buddy!’ (வருகநண்பா) என லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் வரவேற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

 

 

-th