சந்திரயான்-3 தரையிறக்க நிகழ்வு நேரலை: யூடியூபில் அதிக பார்வையை பெற்று உலக சாதனை

நிலவில் இந்தியா சார்பில் இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷனின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதன் 26 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் உலவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சந்திரயான்-3 தரையிறக்க நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பானது.

அதில் யூடியூப் தளத்தில் மட்டும் அதிக பார்வையை பெற்று, அது உலக சாதனையாகவும் அமைந்துள்ளது. யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோ என்ற சாதனை நிகழ்ந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தை கோடான கோடி பேர் யூடியூப் தளத்தில் நேரலையில் பார்த்துள்ளனர்.

ஆக.23 (நேற்று) மாலை 6.04 மணி அளவில் நிலவி சந்திரயான்-3ன் லேண்டர் தரையிறங்கியது. அதை முன்னிட்டு சுமார் 5.20 மணி அளவில் நேரலை ஒளிபரப்பை இஸ்ரோ தொடங்கியது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளம், இஸ்ரோ இணையதளம் மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்த நிகழ்வு ஒளிபரப்பானது. அதோடு இந்தியா உட்பட உலக நாடுகளின் செய்தி நிறுவனங்களும் இதை நேரலையில் ஒளிபரப்பின. கோடான கோடி பேர் இதை ஆர்வமுடன் பார்த்தனர்.

இதில் யூடியூப் தளத்தில் மட்டும் நேரலை நிகழ்வை சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையை நிகழ் நேரத்தில் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உச்சபட்ச பார்வையின் எண்ணிக்கை. அது உலக அளவில் யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோவாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் யூடியூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பான வீடியோக்களில் ‘கால்பந்து உலகக் கோப்பை 2022’ தொடரின் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 61 லட்சம் பார்வையை அதிகபட்சமாக பெற்றிருந்தது. அதே தொடரில் பிரேசில் பிரேசில் மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 52 லட்சம் பார்வையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

-th