இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது. இந்தத் தேர்தல் மூலம் தலைவர் உட்பட 15 நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்தல் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தரப்பு ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

இந்தச் சூழலில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாத காரணத்தால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடுத்து வரும் தொடர்களில் இந்தியா அல்லாத தனி கொடியின் கீழ் விளையாட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடைபெற்ற போது குறிப்பிட்ட கால கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

-th