மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்

வறுமையை ஒழிக்கும் நோக்கில், ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை இந்திய அரசு கடைபிடிப்பதால், கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று ஜி20 அமைப்பின் வர்த்தக அமைப்பான பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜி20 நாடுகளின் வர்த்தக அமைப்பான ‘பிசினஸ் 20’ (பி20) அமைப்பு கடந்த 2010-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஜி20 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் பங்கேற்கின்றன. டெல்லியில் பி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் 55 நாடுகளை சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஜி20 அமைப்பில் சமர்ப்பிப்பதற்கான 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகள் பி20 அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், உச்சி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியாவின் பண்டிகை காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. சந்திரயான் திட்டத்தில் தனியார் துறை, குறு சிறு நடுத்தர தொழில் துறையின் பங்களிப்பும் உள்ளது. இந்த வெற்றியை, இந்தியாவுடன் ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுகிறது.

நமது முதலீட்டுக்கு அதிகம் தேவைப்படும் விஷயம் பரஸ்பர நம்பிக்கை. இதுதான் கரோனா பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். கரோனா பெருந்தொற்று காலத்தில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பியது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா அமல்படுத்திய கொள்கைகளால், கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை இந்திய அரசு கடைபிடிக்கிறது. இதன் காரணமாக, வறுமைநிலையில் இருந்து மக்கள் விடுபட்டு, அவர்களது நிலைமை மேம்படும். அடுத்த 5-7 ஆண்டுகளில், நடுத்தர வர்க்க மக்களை நீங்கள் அதிக அளவில் பார்ப்பீர்கள். இந்த புதிய நடுத்தர வர்க்கத்தினர்தான் மிகப் பெரிய நுகர்வோராக இருப்பார்கள். இவர்கள் மூலமாகநாட்டின் பொருளாதார வளர்ச்சிஅதிகரிக்கும். ஏழைகளின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் நடுத்தர வர்க்கமும், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களும் பயனடைகின்றன.

வர்த்தகம் – நுகர்வோர் இடையேசமநிலை இருக்கும்போதுதான் தொழில்கள் லாபகரமாக இருக்கும். இது நாடுகளுக்கும் பொருந்தும். மற்ற நாடுகளை வெறும் சந்தையாக கருதுவது உற்பத்தி நாடுகளுக்கு விரைவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும்சர்வதேச நுகர்வோர் நலன் தினத்தை உலக வர்த்தக சமுதாயத்தினர் கொண்டாடி, நுகர்வோர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இது தொழில் துறையினர் – நுகர்வோர் இடையே நம்பிக்கையை வலுப்படுத்த உதவும்.

நெறிமுறையுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்ய உலகளாவிய தொழில் துறையினரும், அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த உலகம் என்பது பகிரப்பட்ட நோக்கம், பகிரப்பட்ட வளம், பகிரப்பட்ட எதிர்காலம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

 

 

 

-th