பிரதமர் மோடிக்கு 80% இந்தியர்கள் ஆதரவு – அமெரிக்காவின் பியூ ஆராய்ச்சி மைய ஆய்வில் தகவல்

பிரதமர் மோடிக்கு 80% இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் கருத்து கணிப்பு கூறுகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செயல்படும் பியூ ஆராய்ச்சி மையம் லாபநோக்கமற்ற அமைப்பாகும். இது உலக நாடுகளில் சமூக பிரச்சினைகள், பொதுமக்கள் கருத்துக்கள் பற்றி ஆண்டுதோறும் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அறிக்கைகளை வெளியிடுகிறது.

இந்நிலையில், அடுத்தாண்டு பிரதமர் நரேந்தி மோடி 3-வது முறையாக பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளார். மேலும், டெல்லியில் அடுத்த மாதம்நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதை முன்னிட்டு, பியூ ஆராய்ச்சி மையம் பிரதமர் மோடி பற்றி 2,611 இந்தியர்கள் உட்பட 24 நாடுகளைச் சேர்ந்த சுமார் 31 ஆயிரம் பேரிடம் கடந்தமார்ச் 25-ம் தேதி முதல் மே 11-ம்தேதி வரை கருத்து கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டது.அதில் கூறியிருப்பதாவது:

இந்தியர்களில் 10-ல் 8 பேர் பிரதமர் மோடி பற்றி சாதகமான கருத்தை கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு வலுவடைந்துள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர். 55% பேர் சாதகமான கருத்துக்களையும், ஐந்தில்ஒரு பங்கினர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

தேசிய ஜனநாய கூட்டணியில் ஆளும் கட்சிகளை ஆதரிப்போர், இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். உலகரங்கில் இந்தியா வலுவடைந்து வருவதாக பெண்களை விட ஆண்கள் அதிகளவில் நம்புவது போல் தெரிகிறது. இந்தியாவின் செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளில் வலுவடைந்து வருவதாக 10-ல் 7 பேர் கூறியுள்ளனர். பலவீனம் அடைந்து வருவதாக 5-ல் ஒரு பகுதிக்கும் குறைவானவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியர்களில் 65 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கு சாதகமான கருத்தை தெரிவித்துள்ளனர். 10-ல்4 பேர் மட்டுமே ரஷ்யாவின் செல்வாக்கு வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தாண்டு கருத்து கணிப்பு நடத்தப்பட்ட 24 நாடுகளில் இந்தியாவில் மட்டுமே அதிகளவில் ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்தையும், அதிபர் விளாடிமிர் புதின் மேல் நம்பிக்கையும் வைத்துள்ளனர். இந்தியர்களில் 57% பேர் ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித் துள்ளனர்.

இந்தியா- சீன எல்லை பிரச்சினை காரணமாக சீனா பற்றிமூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பற்றி இந்தியாவின் சாதகமான கருத்து 10% குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செல்வாக்கு ஒரே மாதிரியாக உள்ளது என 40% இந்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

-th